பதிவு செய்த நாள்
05
ஏப்
2016
10:04
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி விழாவில் நேற்று ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி, கயிறு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோயில் பங்குனி விழா மார்ச் 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாநாட்களில் அம்மன் இரவில் வீதியுலா வருதல் நடந்தது. தினமும் பெண் பக்தர்கள் இரவு முதல் காலை வரை மஞ்சள், வேப்பிலை கலந்த நீரை கொடிமரத்தில் ஊற்றி,தீபம் ஏற்றி வழிபட்டனர்.
கரகம் எடுத்தல்: விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.3ல் பொங்கல் விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர். நேற்று பக்தர்கள் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், கரும்புள்ளிகள் உட்பட பல வேடங்கள் போட்டும், காவடி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேரோட்டம்: விருதுநகர்,மதுரை, துாத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை 5 மணிக்கு தேரில் வெயிலுகந்தம்மன், பராசக்தி மாரியம்மன் எழுந்தருள தேரோட்டம்நடக்கிறது.