கம்பம்: வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க கிராமங்களில் நடக்கும் கோயில் திருவிழாக்களை கண்காணிக்க, பறக்கும் படையினருக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம் மட்டுமின்றி துணிகள், அலைபேசி சிம்கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் கிராமங்களில் அம்மன் கோயில் திருவிழாக்கள் நடைபெறும். இதில் அரசியல்கட்சி பிரமுகர்கள் அன்பளிப்பு என்ற பெயரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்க வாய்ப்புள்ளதாகக்கூறி, திருவிழாக்களை கண்காணிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சட்டசபை தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர்.