பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
12:04
திருத்தணி; தமிழ் புத்தாண்டான சித்திரை மாதம் முதல் நாளையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில், 1,008 பால்குட ஊர்வலமும் சிறப்பு தரிசனமும் நேற்று நடந்தன. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை மாதம் முதல் நாளையொட்டி, காலை 9:00 மணிக்கு, நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள, கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில் இருந்து, 1,008 பால்குட ஊர்வலம் தொடங்கியது. கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி, அரக்கோணம் எம்.பி., அரி, திருத்தணி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டு 1,008 பால்குட ஊர்வலத்தை துவக்கிவைத்தனர்.
ஊர்வலம், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, பெரிய தெரு, ஜோதிசாமி தெரு வழியாக, மலைக் கோவிலில் உள்ள, காவடி மண்டபத்திற்கு வந்தடைந்தது. தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், தங்கரதத்தில் எழுந்தருளி, மாடவீதியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர்.முன்னதாக, சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை ஒட்டி, காலை 9:30 மணிக்கு, சிம்ம வாகனத்திலும், இரவு 7:00 மணிக்கு, ஆட்டுக்கிடாய் வாகனத்திலும் உற்சவ பெருமான் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், முருகன் துணை கோவிலான மத்துார் மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில், தமிழ் புத்தாண்டை ஒட்டி, 23ம் ஆண்டு 1,008 பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நடந்தது.