பதிவு செய்த நாள்
30
ஆக
2011
03:08
இமயமலைத் தொடரில் லடாக் பகுதியில் இருக்கும் லே பிள்ளையார் தான். லே லடாக்கின் தலைநகரம். இங்கு பணியாற்றிய ஒரு குடும்பத்தினரின் கனவில் யானை அடிக்கடி துரத்துவது போல இருந்தது. ஒருமுறை அவர்கள் அங்குள்ள ஸபித்துக் காளிமாதா கோயிலுக்கு சென்றபோது, பிள்ளையாருக்கு கோயில் கட்டும் எண்ணம் உதித்தது. அதன்பின், யானை கனவில் துரத்துவது நின்றுவிட்டது. பின் காஞ்சிப் பெரியவரின் ஆசியைப் பெற்று கோயில் திருப்பணியைத் துவக்கினர். கட்டுமானப்பொருட்களும், விக்ரஹமும் சென்னையில் இருந்து சென்றது. மிக உயரமான இடத்தில் முறைப்படி ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் இவர். கடல்மட்டத்தில் இருந்து 11,500 அடி உயரம் உள்ள இக்கோயிலை ஜுன் முதல் செப்டம்பர் வரை மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற காலங்களில் பனியால் சூழப்பட்டிருக்கும். 2006 ஆகஸ்ட் 4ல் இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
கள்ளவாரணப் பிள்ளையார்: நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் கள்ள வாரணபிள்ளையார் அருள்பாலிக்கிறார். இவரை சமஸ்கிருதத்தில் சோர கணபதி என்பார்கள். பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபின், மகாவிஷ்ணு அனைவருக்கும் கொடுத்தார். பொதுவாக, விநாயகர் பூஜைக்குப் பின்னரே இத்தகைய புண்ணியச் செயல்களைச் செய்ய வேண்டும். இதனால் விநாயகப் பெருமான் அந்த அமிர்த குடத்தை எடுத்து இத்தலத்தில் ஒளித்து வைத்தார். எனவே இத்தலத்து விநாயகர் கள்ள வாரண பிள்ளையார் எனப்படுகிறார். அந்த குடம் லிங்கமாக மாறி அமிர்தகடேஸ்வரர் ஆனது. இதனால் தான் ஆயுள்விருத்தி தொடர்பான யாகங்கள், பூஜைகள் இங்கு செய்வது சிறப்பாகும்.
ஆவணியில் ஆண்டு ஆரம்பம்: கேரளத்தில் ஆவணியே (சிம்ம மாதம்) கொல்லம் ஆண்டின் (மலையாள புத்தாண்டு) முதல் மாதமாகப் பின்பற்றப்படுகிறது. முழுமுதற்கடவுளான விநாயகருக்குரிய விநாயகர் சதுர்த்தி ஆவணியில் கொண்டாடப்படுவதன் அடிப்படையில் இவ்வாறு பின்பற்றுகின்றனர். கேரளத்தின் முக்கிய விழாவான ஓணம், புத்தாண்டு மாதத்தில் கொண்டாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இம்மாதத்தில் நவக்கிரக முதல்வரான சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பெறுகிறார். எல்லாவகையிலும் ஏற்றம் மிக்க மாதமாக ஆவணி அமைந்துள்ளது.
தீராத பாவமும் தீரும்: வேதாரண்யம் வேதீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் விநாயகரை பிரம்மஹத்தி விநாயகர் என்பர். இந்த உலகத்திலேயே கொடிய பாவங்கள் எனக்கருதப்படுபவை பசுவைக் கொல்வது, அதற்கடுத்தது பிராமணர்களையும், சாதுக்களையும் கொலை செய்வது, நம்பிக்கை துரோகம் செய்வது, பெண்களை ஏமாற்றியோ, வலுக்கட்டாயமாகவோ கெடுப்பது. இந்தச் செயல்களைச் செய்தோருக்கு எத்தனை பிறவி எடுத்தாலும் பாவங்கள் தீராது. அவரது சந்ததிகளும் நன்றாக இருக்காது. இத்தகைய கொடிய பாவங்களுக்கும் தீர்வளிக்கிறார் இவர். இவரிடம் மன்னிப்பு கேட்டு, தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும் செய்ய வேண்டும். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் தோஷம் விலகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்தக் கோயில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து வேதாரண்யத்திற்கு நேரடி பஸ் உண்டு. இந்தக் கோயிலில் தான் நாவுக்கரசர் பாட மூடிக்கிடந்த கதவு திறந்தது. சம்பந்தர் பாட அந்தக் கதவு மூடிக்கொண்டது. புனிதமான இந்தக் கதவுக்கு வெள்ளிக் கவசம் சாத்தியுள்ளனர்.