சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவில் குண்டம் விழாவில், திராளான பக்தர்கள் தீ மிதித்தனர். சத்தியமங்கலம் வடக்குபேட்டையில் உள்ளது தண்டுமாரியம்மன் கோவில். பண்ணாரி மாரியம்மனின் சகோதரி என்று அழைக்கப்படும் இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த, 6ம் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் இரவு இப்பகுதி இளைஞர்கள் கம்பத்தை சுற்றி நடனமாடி மகிழ்ந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை,6 மணிக்கு தொடங்கியது. கோவில் பூசாரி கோகுல் முதலில் தீ மிதித்தார். அவரை தொடர்ந்து பக்தர்கள் மாரியம்மா, மாரியம்மா என்ற கோஷத்துடன் கையில் வேப்பிலையுடன் வரிசையாக தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர். ஆண்கள், பெண்கள், கல்லூரி மாணவிகள் என நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். தண்டுமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடந்தது. இன்று (21ம் தேதி) காலை பொங்கல் விழாவும், இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (22ம் தேதி) விளக்கு பூஜையும், 23ம் தேதி மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மன் வீதிஉலாவும், 28ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.