கொடுமுடியில் சித்திரை தேர்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2016 03:04
கொடுமுடி: கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் சித்திரை தேர்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். கடந்த, 11ம் தேதி கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை நேரத்தில் கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், விமானம் மற்றும் பூதவாகனத்தில் திருவீதி உலா வந்தன. சுவாமி புறப்பாட்டுடன் ஓதுவார் மூர்த்திகள் குழுவினரின் திருமுறைப்பாராயணம் மற்றும் நாதஸ்வர நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை வடிவுடைநாயகி, மகுடேஸ்வரர், வீரநாராயணபெருமாள், மகாலட்சுமி சுவாமிகள், தேரில் அலங்காரத்துடன் கொடுமுடி கோவில் மற்றும் கடைவீதி பகுதிகளில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தனர். தேரோட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். நாளை சுவாமிகள் புஷ்ப பல்லாக்கு விடையாத்தி உற்சவத்தில் வலம் வருவதால் திருவிழா நிறைவுவடைகிறது.