பதிவு செய்த நாள்
22
ஏப்
2016
11:04
நாசிக்: மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள திரியம்பகேஸ்வர் கோவிலின் கருவறைக்குள் சென்று தரிசனம் செய்ய, பெண் போராட்டக்காரர்களுக்கு, அனுமதி அளிக்கப்பட்டது. மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு உள்ளது. அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சனி சிங்னபுர் கோவிலில் நுழைய, பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மும்பை ஐகோர்ட் உத்தரவின்படி, பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் நாசிக்கில் உள்ள கோவிலில், பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக, பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கருவறைக்குள் பெண்கள் செல்ல தடை தொடர்ந்தது. தொடர் போராட்டத்தால், ஈரமான பருத்தி அல்லது பட்டுச் சேலையுடன், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பெண்களை அனுமதிக்க, கோவில் நிர்வாகம் முன்வந்தது. இந்நிலையில், பெண்கள் அமைப்பைச் சேர்ந்த, நான்கு பேர், நேற்று காலையில், கோவில் கருவறைக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.