பஞ்சபூதத் தலங்களில் பிறக்க முக்தி தரும் தலம் திருவாரூர். பல சிறப்புக்களைப் பெற்றுள்ள இத்தலத்தில் மேலும் ஒரு சிறப்பாக மூலாதார கணபதி வீற்றிருக்கிறார். ஐந்து தலைப் பாம்பு சுருண்டு கிடக்க, அதன் சுருள் உடலின் மத்தியில், விரிந்த தாமரையின் மேல், நர்த்தன கணபதியாகக் காட்சி தருகிறார். இடக்காலை ஊன்றி, வலக்காலை தூக்கியபடி, திருக்கரங்களில் முறையே பாசஅங்குசம், மோதகம் மற்றும் தந்தத்தை ஏந்தியபடி நடனம் ஆடுகிறார். இருபுறமும் தாளமும் மத்தளமும் வாசிக்கும் பூதகணங்கள். முத்துசுவாமி தீட்சிதர், ஸ்ரீ ராகத்தில் ஸ்ரீமூலாதார சக்ர விநாயக என்ற கீர்த்தனையில் இவரைப் பாடியுள்ளார். மனித உடலில் உள்ள தண்டுவடம் முடியும் இடத்தில், முக்கோண வடிவில் மூலாதாரம் உள்ளது. அதில் நான்கு இதழ்களோடு கூடிய தாமரை வடிவும் உள்ளது. அதன் நடுவில் உறங்கும் மூலாதார குண்டலினி சக்தியை விழிப்புறச் செய்யும் வகையில், மூலாதார கணபதி விளங்குகிறார். அவரே, பரமானந்தத்தின் உருவகமான நடராஜரைப் போன்று ஆடிக்காண்பித்து, சிவயோகத்தை உலகுக்கு உணர்த்துகிறார்.