விநாயகப் பெருமான் தென்னகத்தைப் பொறுத்தவரை பிரம்மசாரி. ஆனால் அவரோ வடநாட்டில் திருமணம் செய்துகொண்ட இல்லறவாசி. அதுவும் சில தலங்களில் அவர் தம் மனைவி, மகன்களுடன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பானது. இத்தகைய ஒரு இடம் ராஜஸ்தான் மாநிலம் ரண்தம்பூர் கோட்டையாகும். இது இம்மாநிலத்தின் சவாய் மாதேபூருக்கு அருகில் வனவிலங்கு சரணாலயத்தில் இருக்கிறது. இங்கே இவர் தனது மனைவியரான சித்தி புத்தியுடனும் தன் மகன்களான சுபம், லாபம் என்ற இருவருடனும் குடும்ப சகிதமாய் அருளாட்சி புரிகின்றார். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ரண்தம்பூர் கோட்டை, சௌஹான் அரச வம்சத்தைச் சேர்ந்த ஹமீராவின் காலத்தில் பேரும் புகழும் பெற்று விளங்கியது. அப்போது கோட்டை மதில் சுவரின் ஒரு பகுதியில் சுயம்புவாகத் தோன்றியவரே வரசித்தி விநாயகர். இவருக்கு அரசர் ஹமீரா கோயில் ஒன்றைக் கட்டினார். இக்கோயில் பின்னர் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மக்கள் இன்று இவரை ரண்தம்பூர் கோட்டையின் அதிபதி என்று பொருள்படும் வகையில் ரண்தம்வார் என மரியாதையாக அழைக்கின்றனர். கோட்டை கோமகனான இவருக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை குறிப்பிட்டு, அவற்றை நிறைவேற்றித்தர வேண்டி கடிதங்கள் அனுப்புகின்றனர். பல மொழிகளில் எழுதப்பட்ட இந்தக் கடிதங்கள் தினமும் படிக்கப்பட்டு அவருக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. பக்தர்களின் கோரிக்கைகளை கடித வாயிலாக ஏற்று அவற்றை நிறைவேற்றும் வரப்பிரசாதியான இவருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.