Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » ஜகன்மாதா
ஜகன்மாதா(சாரதா தேவி)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2016
16:50

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, தாயை தெய்வமாகப் போற்று, தந்தையை தெய்வமாகப் போற்று என்கிறது வேதம். இதையே அவ்வைப் பிராட்டி அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார். இவ்விரண்டிலுமே அப்பாவை விட அம்மாவே முதலில் வருகிறார். தன் குழந்தையிடம் அன்பும் அக்கறையும் கொள்வதில் தாய்க்கு நிகரானவர் இவ்வுலகில் வேறொருவரும் இல்லை. அதனால்தான் எல்லோருக்கும் அம்மாவிடம் இவ்வளவு ஈர்ப்பு. பரம்பொருளைத் தாயாக வழிபடுவதை மகான்கள் காட்டியருளியுள்ளார்கள். இறைவனைத் தாயாகக் கொண்டாடும்போது அவரிடத்தில் ஈர்ப்பும் அவரை நினைக்கையில் ஆனந்தமும் உண்டாகும்.

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே - மாணிக்கவாசகர். அம்மையும் நீ, அப்பனும் நீ, திருநாவுக்கரசர். தாயானே, தந்தையுமாகிய தன்மைகள் ஆயானே சம்பந்தர். தாயவளாய்த் தந்தை ஆகி - சுந்தரர். அத்தனாகி அன்னை ஆகி, ஆளும் எம்பிரானுமாய் முதலாயிரம். இறைவனை நமக்கு மட்டுமல்ல; எல்லா உயிர்களுக்கும் எல்லா உலகங்களுக்கும் தாயாக, ஜகத்ஜனனியாக பாவிப்பது நம் மரபு.

எல்லா பிறவிகளுக்கும் எல்லாத் தாய்மார்களுக்கும் உள்ளே தாய்மையின் வடிவமாக, அந்த பராசக்தியானவள் எப்போதும் தொடர்ந்து இருந்து வருகிறாள். அதனால்தான் அப்பர் இறைவனைத் தொடர்ந்து நின்ற என் தாயானை என்கிறார். இதையே தேவீ மாகாத்மியம் எல்லா உயிர்களிலும் தாய்மை வடிவமாக உள்ள தேவிக்கு வணக்கம் என்று போற்றுகிறது. அந்த பராசக்தி ஓரிருவருக்கு நல்ல புழு, பூச்சிகள், விலங்குகள், மனிதர்கள், தேவர்கள் என்று அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயானவள். தேவி பராசக்தியின் தாய்மைத் தத்துவத்தின் வெளிப்பாடே அன்னை ஸ்ரீசாரதா தேவி. அன்னை ஸ்ரீசாரதாதேவியே, தாம் உலகின் அன்னை என்பதைப் பல தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். என்னைத் தவிர வேறோர் அம்மா இருக்கிறாளா என்ன? எல்லாப் பெண்களிலும் நானே இருக்கிறேன். யார் எங்கிருந்து வந்தாலும் சரி, அனைவரும் என் பிள்ளைகளே இது அறுதி சத்தியம். இதனைப் புரிந்துகொள். அம்மா என்று அழைத்துக் கொண்டு என்னிடம் வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் என் பிள்ளைகளே.

அன்பிற்கு உருவம் இல்லை. அது தத்துவம் அருவமாக உள்ள அன்பைத் தன் பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தெய்விகக் கருணையே அன்னை சாரதையின் வடிவில் இவ்வுலகில் வந்தது.

பணிவான பக்தையாக: மங்கல மூர்த்தியான மகாதேவன் பராசக்தியான உன்னுடன் சேர்ந்திருந்தால் மட்டுமே பிரபஞ்சத்தை ஆக்குவதற்கு சக்தி படைத்தவராக ஆவார். இல்லையெனில் அசைவதற்கும் திறமை படைத்தவராக ஆவதில்லை. எனவே ஹரி, ஹரன், பிரம்மா முதலியவர்களும் பூஜிக்கும் உன்னைப் புண்ணியம் செய்யாதவன் வணங்குவதற்கோ அல்லது துதிப்பதற்கோ எவ்விதம் தகுதி உள்ளவனாவான்? என்கிறது சவுந்தர்யலஹரி. அப்படிப்பட்ட பராசக்தி தன்னைப் பின்னே மறைத்துக்கொண்டு பதியை முன்னிலைப் படுத்துவதையே விரும்புகிறாள். தனது பதியாகிய இறைவனுக்குச் சக்தியாகவே இருந்தாலும், தன்னைவிட அவரையே சக்திமானாகக் காட்டுவதே பராசக்தியின் இயல்பு. பதிக்கு சக்தியாகத் தான் விளங்கினாலும் பதியை அவள் அடக்கி வைப்பதில்லை. இதுவே பெண்களின் அழகு. சிதம்பரத்தில் பஞ்ச க்ருத்யத்தை நடராஜருக்குக் கொடுத்து விட்டு தான் பரம சாந்தியுடைவளாக, இருக்கும் இடம் தெரியாதபடி இருப்பாள் அன்னை சிவகாமி. இதே இயல்பு தூய அன்னையின் வாழ்வில் தெளிவாக வெளிப்படுகிறது.

அன்னைக்கு எல்லாம் குருதேவரே. தன்னை அவரது ஒரு கருவியாகவே அன்னை கருதினார். குருதேவரிலேயே தம்மை முழுமையாகக் கரைத்துக் கொண்டார். தமக்கு மற்றவர்களைவிட அவரிடம் உரிமை அதிகம் உள்ளது என்று ஒருபோதும் அன்னை எண்ணியதில்லை. எல்லோருக்கும் குருதேவர் சொந்தமானவர். அவரை அடைய பக்தி ஒன்றே தேவையானது என்பர் அவர். குருதேவர் தம்முடன் எப்போதும் வாழ்கிறார் என்ற உணர்வை, தம்மிடம் வருபவர்களிடமும் ஊட்டிவிடுவார். குருதேவரின் கருணையும் பாதுகாப்பும் அவர்களுக்கு இருப்பதை உறுதிப்படுத்துவார். தனிப்பட்ட வகையில் தமக்கு எந்த விதமான ஆற்றலும் இருப்பதாக அவர் காட்டிக் கொண்டதில்லை. ஒருமுறை சீடர் ஒருவர், அம்மா, உங்கள் ஆசிகளால் நான் நன்றாக இருக்கிறேன் என்றார். உடனே அன்னை சற்றுக் கடுமையாக, இதிலெல்லாம் என்னை ஏன் இழுக்கிறாய்? குருதேவரின் பெயரை உன்னால் சொல்ல முடியாதா? இங்கு நீ காண்பவை அனைத்தும் அவரால்தான் நடைபெறுகின்றன என்றார்.

உபதேசம் அளிக்கும்படி யாராவது அவரிடம் கேட்டால் சில வேளைகளில், நானா, உபதேசம் தருவதா? குருதேவரின் உபதேசங்கள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அவற்றுள் ஏதாவது ஒன்றைப் புரிந்துகொண்டு அதை உன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடியமானால் எல்லாம் கிடைக்கும் என்பார். யாராவது அவரை உயர்த்திப் பேசி, தெய்வம் என்றெல்லாம் கூறினால், உடனே அவர்களைத் தடுத்து, எல்லாமே அவர்தான். இப்போது நான் இருக்கும் நிலைக்குக் காரணம், அவர் தமது திருவடிகளில் எனக்கு ஓர்இடம் கொடுத்ததுதான் என்பார். இத்தகைய ஒரு பணிவான பக்தையாக வாழவே அவர் விரும்பினார்.

அன்னையின் மகிமை: அத்தகைய அன்னையின் மகிமையை குருதேவர் மட்டுமே அறிவார். அவரது மகிமையை அவர் உணர்த்துவதை சில நிகழ்ச்சிகளின் மூலம் காணலாம். ஒருமுறை குருதேவரின் முன்னிலையிலேயே அவருக்குப் பணிவிடை செய்து வந்த ஹிருதயன் அன்னையை மரியாதைக் குறைவாகப் பேசினான். அன்னை அதைப் பொறுத்துக் கொண்டார். ஆனால் ஹிருதயனது செயலின் விளைவை அறிந்திருந்த குருதேவர், இதோ பார், நீ என்னை எவ்வளவோ நிந்தனை செய்கிறாய். ஆனால் அவளிடம் மட்டும் விளையாடாதே. எனக்குள் இருக்கும் சக்தி சினத்தாலும் ஒருவேளை நீ பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் அவளிடம் இருக்கும் சக்தி சீறி எழுந்தால் பிரம்மா. விஷ்ணு, மகேசுவரர்கள் வந்தாலும் உன்னைக் காப்பாற்ற முடியாது என்று அவனை எச்சரித்தார். தம்மாலும் அன்னையின் மனம் எந்த விதத்திலும் புண்பட்டுவிடாதபடி, குருதேவர் எச்சரிக்கையாகவே இருந்தார். குடும்ப விஷயத்திலும் சரி, வேறு எதிலும் சரி, தன் விருப்பம் இதுதான் என்பதை அன்னை உறுதியாகக் கூறிவிட்டால் அவருடைய விருப்பத்தை எதிர்த்தோ அதற்கு மாறாகவோ அவர் நடந்ததில்லை.

பின்னாளில் பக்தர் ஒருவர் அன்னையிடம், குருதேவரின் மறைவிற்குப் பிறகு அவரால் எப்படி உயிர் தரித்து வாழ முடிந்தது என்று கேட்டார். அதற்கு அன்னை, அனைத்தையும் தாய் வடிவாகக் கண்டார் குருதேவர். அந்தத் தாய்மையை உலகிற்கு உணர்த்தவே என்னை விட்டுச் சென்றார் என்று கூறினார். உலகையே அரவணைக்கின்ற, நல்லவர் - கெட்டவர் என்றெல்லாம் பாகுபடுத்தாமல் அனைவரையும் ஏற்றுக் கொள்கின்ற அந்தத் தாய்மையின் வெளிப்பாடுகளை தட்சிணேசுவர நாட்களிலேயே அன்னையின் வாழ்வில் நாம் காண முடிகிறது.

ஞானதாயினி: இதற்கு முந்தைய அவதாரங்களில் பகவான் மட்டுமே பிரதானமாக விளங்கினார். இந்த ராமகிருஷ்ண அவதாரத்தில் தமது சக்தியான அன்னையையும் பிரதானப்படுத்தி அவரது மகிமையை உலகிற்கு உணர்த்தும் விதமாக பகவானின் சங்கல்பம் அமைந்திருந்தது. ஒருநாள் குருதேவர் அன்னையை நீண்ட நேரம் கூர்ந்து நோக்கியவாறு அமர்ந்திருந்தார். அதை கவனித்த அன்னை அவரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்றார். அதற்கு குருதேவர். நீ எதுவுமே செய்ய மாட்டாயா? நான்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு அன்னை, நான் ஒரு பெண். நான் என்ன செய்ய முடியும் என்றார். நீ செய்தே தீர வேண்டும். நீ செய்ய வேண்டியவை ஏராளம் உள்ளன என்றார் குருதேவர். அவர் இப்படித் தம்மிடம் பணியை ஒப்படைப்பதன் பொருளை நன்றாக உணர்ந்திருந்த அன்னை மறுமொழி எதுவும் கூறாமல் அமர்ந்திருந்தார். மற்றொரு நாளும் குருதேவர் இவ்வாறே, மக்கள் அறியாமை இருளில் புழுப்போல் உழல்கிறார்கள். நீ அவர்களைக் காக்கத்தான் வேண்டும் என்று கூறினார்.

அத்துடன் தம்மிடம் வரும் பக்தைகளையும் படிப்படியாக அன்னையிடம் குருதேவர் ஒப்படைத்தார். அதன் மூலம் அவரை ராமகிருஷ்ண சங்க ஜனனி ஆக்கினார். இதன் பின் அன்னை தனது தெய்விகத்தை மெல்ல மெல்ல வெளிப்படுத்தினார். ஜகன்மாதா ஸ்ரீசாரதை தமது தாய்மை அன்பினால் பக்தர்களை மாயையிலிருந்து விடுவிக்க அதற்கான மார்க்கத்தைக் காட்டி முக்தியை அருளலானார். ஆன்மிக நாட்டமுடையவர்களை ஜீவாத்ம போதத்திலிருந்து விடுவித்து. அவர்களின் நிஜ இயல்பாகிய பிரம்மஸ்வரூபத்தில் ஒன்றிடச் செய்வதே அன்னையின் அருள் மகிமை.

ஒருமுறை பக்தர் ஒருவர் தன் சகோதரியுடன் அன்னையைக் காண சென்றார். அப்போது பக்தரின் சகோதரி, அம்மா, நீங்களே மகாமாயை. தாய், தந்தை, கணவன், குழந்தைகள் என்று ஏதேதோ தந்து எங்களையெல்லாம் நன்றாக மயக்கத்தில் ஆழ்த்தி வைத்துள்ளீர்கள் என்றார். அதற்கு அன்னை, ஒருபோதும் அப்படிச் சொல்லாதே. நானாவது உங்களை மயக்கத்தில் ஆழ்த்துவதாவது. மக்களின் துன்பங்களை எல்லாம் கண்டு நான் படும் வேதனை சொல்லித் தீராது. ஆனால் நான் என்ன செய்வேன். என் மகளே, யாரும் முக்தியை விரும்புவதில்லை என்று பதிலளித்தார்.

எல்லோருக்கும் தாய்: மாயையினால் மனிதன் இறைவனை மறக்கிறான். புழுவைப் போன்று உலகில் உழல்கிறான். ஏதோ புண்ணியத்தால் இறைவனை நாடத் தொடங்கும்போது அவனைத் தெய்வ நிலைக்கு உயர்த்த இறையருள் நிச்சயம் தேவைப்படுகிறது. அந்த அருள் தாயன்பு போன்றது. ஒரு தாய் மகன் கெட்டவனாகிவிட்டாலும் அவனை வெறுத்து ஒதுக்குவதில்லை. அந்த அன்பு ஒருபோதும் மாறாது. அம்மா என்று அழைத்து யாராவது எதையாவது கேட்டால், அதனை மறுக்க என்னால் இயலாது என்றவர் அன்னை. குபுத்ரோஜாயேத க்வசிதபி குமாதாநபவதி பிள்ளை கெட்டவனாக இருக்கலாம். ஆனால் கெட்ட அன்னை என்று ஒருத்தி இருக்கவே முடியாது என்கிறது தேவி அபராத க்ஷமாபன ஸ்தோத்திரம். இந்த உண்மையை அன்னை தாமே பிரகடனப்படுத்தியுள்ளார்.

நான் நல்லவனுக்கும் தாய்,கெட்டவனுக்கும் தாய்; நல்லவளுக்கும் தாய்; கெட்டவளுக்கும் தாய் என்பார் அன்னை. தன் பிள்ளை கெட்டவனாகிவிட்டால் அந்தத் தீய நடத்தையை அவனிடமிருந்து போக்க ஒரு தாய் மிகவும் பாடுபடுவாள். என் குழந்தை சேற்றிலோ சகதியிலோ விழுந்துவிட்ட தென்றால், அதைக் கழுவி மடிமீது வைத்துக்கொள்வதல்லவா என் கடமை? என்று கூறும் அன்னையிடம் தங்கள் தீய நடத்தைக்கும் பாவத்திற்கும் வருந்தி அவரிடம் சரணடைந்து புனிதம் பெற்றவர்கள் ஏராளம்.

காத்திருக்கும் அன்னை: ஒருமுறை சில பக்தர்கள் ஜெயராம்பாடியிலிருந்து காமார்புகூருக்குச் சென்று, குருதேவரின் வாழ்க்கையோடு தொடர்புடைய பல இடங்களையும் தரிசித்தார்கள். அவர்கள் திரும்பி ஜெயராம்பாடி வரும்போது இரவாகி விட்டது. ஊரை அடையும்போது தூரத்தில் யாரோலாந்தர் விளக்குடன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அருகில் சென்றதும் அவர்கள் ஒரு கணம் திகைத்துவிட்டார்கள். எல்லையற்ற கருணைக் கடலாகிய அன்னை அங்கே விளக்குடன் நின்றிருந்தார். அம்மா, நீங்கள் இங்கே என்று தழுதழுத்தக் குரலில் கேட்டார்கள். பரிவுடன் அன்னை, அப்பா, நீங்கள் வெளியூர்க்காரர்கள். காரிருள், வழி தவற நேரலாம். எனவே என் மனம் மிகவும் தவித்தது. இன்னவனிடம், லாந்தரை எடுத்துக்கொண்டு சற்று போய்ப் பார்த்து வா என்று சொல்லிப் பார்த்தேன். அவன் கேட்கவில்லை. எனவேதான் நானே வந்துவிட்டேன். உங்களை எதிர்பார்த்த படி இங்கே நிற்கிறேன் என்றார். ஆம், அன்னை தமது பிள்ளைகளைத் தெய்வ நிலைக்கு உயர்த்தி முக்தி அருள கையில் விளக்கேந்தி காத்துக் கொண்டிருக்கிறார். அவரது பிள்ளைகளான நாம் அவரிடம் மனதைத் திருப்பி அவரைச் சரணடைந்து வாழ்ந்தால் அவர் தம்முடைய திருவடிகளில் புகலிடம் கொடுப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.