பதிவு செய்த நாள்
07
மே
2016
11:05
புதுச்சேரி: மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோவிலில், சித்திரை மாத அமாவாசையான நேற்று, மக்கள் நலன் வேண்டிய, நிகும்பலா யாகம் நடந்தது. புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் 72 அடி உயர மகா பிரத்தியங்கிரா காளி கோவில் அமைந்துள்ளது. இங்கு, அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு, மிளகாய் வற் றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு பெற்றது. இந்த யாகத்தில் பங்கேற்று அம்பாளை தரிசித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும், எதிரிகள் தொந்தரவு நீங்கும் என்பது ஐதீகம். அந்த வகையில், சித்திரை மாத அமாவாசையான நேற்று, மக்கள் நலன் வேண்டி நிகும்பலா யாகம் நடத்தப்பட்டது. காலை 9.00 மணிக்கு பிரத்தியங்கிரா காளிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, 12.00 மணிக்கு கலச பூஜையும், 12.30 மணிக்கு கோவில் குருக்கள் நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் தலைமையில், வேத மந்திரங்கள் ஓத, யாககுண்டத்தில் மிளகாய் வற்றல், இனிப்பு, காய்கறிகள், பழங்கள் கொட்டி யாகம் நடத்தப்பட்டது. இதில், காங், மாநில தலைவர் நமச்சிவாயம் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.