பதிவு செய்த நாள்
07
மே
2016
12:05
பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, 10 ஆண்டுகளுக்கு பின் வரும், 26ம் தேதி தேர்வடம் பிடித்தலுடன் கோலாகலமாக துவங்குகிறது. பொள்ளாச்சியின் வடக்கு பகுதியில் உள்ளது புகழ்பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில். கோவை மாவட்டம் மட்டுமன்றி, கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மன் அருள் பெற்றுச்செல்கின்றனர். இச்சூழலில், கோவில் திருப்பணிகள் நடக்காததால், கும்பாபி ? ஷகம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இதனால்,பொதுமக்கள் பக்தர்கள் வேதனை அடைந்தனர். அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்தியே ஆக வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்தே, அற நிலையத்துறை நடவடிக்கை எடுக்க துவங்கியது. முதல் திருப்பணியாக பழைய திருத்தேர் புதுப்பிக்கும் பணி துவங்கியது. அங்கு, 27 லட்சம் ரூபாய் செலவில் கும்பகோணத்தை சேர்ந்த சிற்பிகள் தேர் திருப்பணியை செய்து முடித்தனர். இரு மாதங்களுக்கு முன் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, கோவிலைச் சுற்றி தேர்வலம் நடத்தப்பட்டது. கோவில் அதிகாரிகளும் ஊர் பொதுமக்களும் பங்கேற்றனர். சமீபத்தில், 48 நாள் மண்டல பூஜைகள் முடிவுக்கு வந்தன. ஏற்கனவே முடிவு செய்தது போல, சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா வரும், மே 26,27,28 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. இம்மூன்று நாட்களும் தேர்வடம் பிடிக்கப்படுகிறது. முன்னதாக, வரும் 9ம் தேதி முகூர்த்தக்கால் நடப்படுகிறது. இதையடுத்து, 10ம் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. கிராமசாந்தி, பூவோடு எடுத்தலும், 25ம் தேதி மாவிளக்கு பூஜையும், அன்றே பொங்கலிடுதலும் நடக்கிறது. தேர் வடம் பிடித்தலை தொடர்ந்து, வரும், 29ம்தேதி மகாஅபிஷேகமும் நடக்கிறது. சூலக்கல் மாரியம்மன் தேர்திருவிழாவை முன்னிட்டு, இப்போதே ஜமீனுக்கு உட்பட்ட 9 கிராமங்களும், ஜமீனுக்கு உட்படாத 9 கிராமங்கள் என, 18 கிராமங்களும் களைகட்ட துவங்கியுள்ளன.