அனைத்து கோயில்களிலும் கட்டணமில்லா தரிசனம் பூஜாரிகள் பேரவை வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2016 12:05
திண்டுக்கல்: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் கட்டணமில்லா தரிசனத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என அகில இந்திய கிராம கோயில் பூஜாரிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய கிராமக்கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் மே 18 முதல் 31 வரை 14 நாட்கள் பட்டுக்கோட்டையில் கொன்னவராயன் கோட்டையில் உள்ள ஆத்மார்த்த குருபீடத்தில் ஆகம பூஜா குறித்த இலவச பயிற்சி நடக்க உள்ளது. பயிற்சியில் விநாயகர், முருகன், சிவன், பெருமாள், அம்மன் கோயில்கள் மற்றும் கிராம தேவதை கோயில்களில் பூஜை செய்கிற முறைகள் கற்பிக்கப்படும். இப்பயிற்சிக்கான கலந்தாய்வுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாநில இணை அமைப்பாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் அழகர்சாமி, மருதமுத்து, பிச்சைமணி முன்னிலை வகித்தனர். சோமசுந்தரம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள கோயில்களில் கட்டணமில்லா தரிசனத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வருமானம் இல்லா அனைத்து கோயில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும். பூஜாரிகளின் ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம். பயிற்சியை நிறைவு செய்யும் பூஜாரிகளுக்கு இந்து மடாதிபதிகள் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும், என்றார்.