ஆழ்வார்குறிச்சி : கடையம் வில்வவனநாதர்-நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் வரும் 6ம் தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது. கடையத்திலிருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் வில்வவனநாதர்-நித்யகல்யாணி அம்பாள் கோயில் உள்ளது. தசரத சக்கரவர்த்தி தனது பாபவிமோசனத்திற்காக இங்கு வந்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும் கடையத்தில் பாரதியார் வாழ்ந்தபோது இந்த கோயில் முன்புள்ள மிகப்பெரிய பாறையில் அமர்ந்து தான் "காணிநிலம் வேண்டும் பராசக்தி என்ற பாடல்களை பாடியுள்ளார். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வரும் 6ம் தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது. அன்று காலை 11 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம், சிறப்பு தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு விசேஷ அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு 7.30 மணியளவில் சுவாமி, அம்பாள் கேடயத்தில் தெப்பத்திற்கு எழுந்தருளி தெப்பத்தை 11 முறை வலம் வருதல் நடக்கிறது. தெப்பத்திலிருந்து இறங்கி பின்னர் சுவாமி, அம்பாள் கோயிலில் ரிஷப வாகனத்தில் வீதியுலாவும், சிறப்பு வாணவேடிக்கையும் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி முருகன் மேற்பார்வையில் வில்வவனநாதர் பக்த பேரவையினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.