காளையார்கோவில்: காளையார்கோவில் சோமேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது. காளையார்கோவில் சோமேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் கோவில் வைகாசி விசாக விழா மே 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இரவு பஞ்சமூர்த்திகள் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. நேற்று அதிகாலை 5மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, 6மணிக்கு பெரிய தேரில் சுவாமி அம்பாளும், சின்னதேரில் அம்பாள் எழுந்தருளினர். 10 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.இரவு தேர்தடம் பார்த்தல், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் ராஜேந்திரன், காளீஸ்வரக்குருக்கள், ஏஎல்.ஏஆர்,தேவகோட்டை தி.ராம.தி. குடும்பத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.