பதிவு செய்த நாள்
21
மே
2016
01:05
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வர, சேறு பூசுதல் நிகழ்ச்சிக்காக நகராட்சி சார்பில், அமராவதி ஆற்றில் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 8ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது, 13ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. அதைதொடர்ந்து, கரூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தீர்த்த குடம், அக்னி சட்டி எடுத்தல், அலகுகுத்தி வந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். அமராவதி ஆற்றில் இருந்து சேறு பூசி வேடமணிந்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். அமராவதி ஆற்றில் சாக்கடை கழிவு நீர் செல்வதால் பக்தர்கள் சேறு பூச முடியாமல் தவித்தனர். மாரியம்மன் கோவில் திருவிழா களைக்கட்ட துவங்கியதால் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பக்தர்கள் பயன்பெறும் வகையில், பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் நகராட்சி சார்பில் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளன. செயற்கை நிரூற்று மூலம் பக்தர்கள் தீர்த்தம் பிடித்தும், நீராடியும் வருகின்றனர். கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா, 23ம் தேதியும், கம்பம் ஆற்று விடும் விழா, 25ம் தேதி நடக்கிறது.