பதிவு செய்த நாள்
27
மே
2016
12:05
அவிநாசி: அவிநாசி கரிவரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம், ஒரே நாளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் உபகோவிலான, கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஏழு ஆண்டுகளாக திருப்பணி நடந்து வருகிறது. பல்வேறு தடங்கலுக்கு மத்தியில், இப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. ஜூலை, 11ல் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதே தினத்தில், பெரிய தேர்நிலையம் அருகே உள்ள, ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவிலிலும், கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையடுத்து, இரு கோவில்களிலும், வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. செயல் அலுவலர் அழகேசன் கூறுகையில், ""பெருமாள் கோவிலில் மகா மண்டபம், திருமதிற்சுவர், தளம், புதிய கதவுகள், கோபுரம் சீரமைத்தல் உள்ளிட்ட திருப்பணி நிறைவு பெற்றுள்ளது. ஆஞ்சநேயர் கோவில் சீரமைக்கப்பட்டு, கற்கார கோவிலாக கட்டப்பட்டுள்ளது. இவ்விரு கோவில்களிலும், ஜூலை, 11ல் கும்பாபிஷேகம் நடைபெறும், என்றார்.