பதிவு செய்த நாள்
30
மே
2016
11:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, 12 ஆண்டுகளுக்கு, ஒரு முறை நடக்கும் குதிரை கட்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் நேற்று துவங்கியது.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த அரியபாடி கிராமத்தில், இரணிய வீரப்பன் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 18 நாட்கள் குதிரை கட்டி திருவிழா நடப்பது வழக்கம். கடந்த, 2004ம் ஆண்டுக்கு பிறகு, நேற்று திருவிழா துவங்கியதை முன்னிட்டு, கோவிலில் காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பூ கரகம் ஏந்தி, பக்தர்கள் தாரை, தப்பட்டை, கரகாட்டத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். விழாவையொட்டி தினமும் மாலை அக்னி சட்டி ஏந்தி, பூங்கரகம் கரகாட்டத்துடன் வீதி உலா நடக்கிறது. ஆன்மிக நாடகங்களும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும், 12ம் தேதி காலை, 6 மணிக்கு, அர்ச்சுனன் தபசும், 10 மணிக்குமேல் அம்மன் திருக்கல்யாணமும் நடக்கிறது. அன்று மாலை, 3 மணிக்கு, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், கரகாட்டம், நையாண்டி மேளத்துடன் புதிதாக குதிரை சிலைகள் செய்து வழிபாடு நடத்தி, ஊர்வலமாக தலையில் சுமந்து சென்று, கோவிலில் வைத்து வேண்டுதலை நிறைவேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.