வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு கீழரதவீதி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நவதானியக்கூழ் ஊற்றும் நிகழ்ச்சியுடன் 7 நாட்கள் விழா தொடர்ந்து நடந்தது. 8 ம் நாளில் அம்மன் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஊர் பிரமுகர்கள் கரகம் எடுத்து கோயில் வந்தனர். பெண்கள் அவர்களை மாலைமரியாதை செய்து கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். கோயிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. மறுநாள் பொங்கல் விழா நடந்தது. கோயிலுக்கு முன்பு பெண்கள் பொங்கலிட்டும், மாவிளக்கு வழிபாடு செய்தும் நேர்த்திக்கடன் செய்தும் வழிபட்டனர். விழாக்குழு அமைப்பாளர் முருகேசன், தலைவர் சுந்தரம், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் கருப்பையா, நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.