பதிவு செய்த நாள்
02
ஜூன்
2016
11:06
ஓங்கி உயர்ந்த மரங்கள், அடர்ந்த வனங்களுடன் கூடிய மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் நீர் சுனையாக மாறி உள்ளது. வறட்சியான கோடையிலும் இந்த சுனையில் நீர் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுனையில் நீராடி, முருகனை வழிபடுவதால் தீராத நோய்கள், மனக்கவலைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கோயிலில் இன்றளவும் இப்பகுதியில் உள்ள பளியர் இன மக்களே கோயிலில் பூஜைகள் செய்து வருகின்றனர். மாவூற்று மலை அடிவாரத்திலிருந்து, நானுாறு அடி உயரத்தில் 157 படிகளைக்கடந்து கோயிலுக்கு செல்லும்படியாக உள்ளது.
திருவிழா: ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதியில் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். காவடி எடுத்தும், பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும் வந்து வேலப்பரை வழிபட்டு செல்வர். அடுத்தடுத்து வரும் நான்கு வாரங்களிலும் விழா நடைபெறும். மாதாந்திர கார்த்திகை, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்வர். நேர்த்திக்கடனாக காவல் தெய்வம் கருப்பசாமிக்கு ஆட்டுக்கிடா வெட்டி அன்னதானம் வழங்குவர். ராசக்காள்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த மண்டபம் தற்போது சிதிலமடைந்துள்ளது. கழிப்பறை வசதிகள் இல்லாததால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் திறந்த வெளிக்கழிப்பிடத்தை பயன்படுத்துவதால், கோயில் வளாகத்தில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எப்போதும் கிடைக்கும்படியான பாதுகாப்பான குடிநீர் வசதி கோயில் வளாகத்தில் இல்லை.
சுகாதார சீர்கேடு: விழாக்காலங்களில் குவியும்குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்படுவதில்லை. நேர்த்திக்கடனாக ஆட்டு கிடா வெட்டி விருந்து படைக்கும் போதும் பயன்படுத்தப்படும் பாலிதீன் டம்ளர், உணவு கழிவுகள், எச்சில் இலைகள் ஆங்காங்கே குவிந்து அகற்றப்படாமல் சுகாதார கேடு ஏற்படுகிறது. மழை பெய்து மழைநீருடன் கலந்து வெளியேறும் வரை கோயில் வளாகத்தில் குப்பை குவிந்து சுற்றுச்சூழலை பாதிப்படையச்செய்கிறது. குளிக்கும் இடங்களில் ஷாம்பு போன்ற பொருட்களை பயன்படுத்தி, அதன் கழிவுகளை ஆங்காங்கே வீசி விடுகின்றனர். ‘குடி’மகன்கள் விட்டுச்செல்லும் காலி பாட்டில்கள், உடைந்த பாட்டில்கள் பல இடங்களிலும் சிதறிக்கிடக்கின்றன. ஆண்டிபட்டியில் இருந்து கோயில் வரை செல்வதற்கான ரோடு வசதிகள், வாகன வசதிகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில் வளாகம் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
பராமரிப்பில்லாத மண்டபம்: கோயில் வளாகப்பகுதியில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கி செல்லவும், அன்னதானம் வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. குடிநீர் தொட்டிகளில் குடிநீர் சப்ளை செய்யததால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர்.
அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோயில் மேம்பாட்டிற்காக அரசு மூலம் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை. ஊராட்சியில் நிதி ஆதாரத்தை பொறுத்து அவ்வப்போது சில பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.விழா காலங்களில் கூடுதலாக பக்தர்கள் வரும் போது தற்காலிக வசதிகள் செய்து தரப்படுகிறது. தேவஸ்தானம் சார்பில் தரிசன வசதி மேம்படுத்தப்படுகிறது. கோயில் வளாகத்தில் குடிநீர் வசதி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் நீர் போதுமானதாக இல்லை. நிதி கிடைக்கும்பட்சத்தில், மண்டபம் மற்றும் நவீன கழிப்பிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.