பதிவு செய்த நாள்
04
ஜூன்
2016
11:06
தமிழக கோவில்களின் செயல்பாடுகள் குறித்து, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், அறநிலையத்துறை மூடி மறைத்துள்ளது, வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
தமிழகத்தில், 34,574 கோவில்கள் உள்ளன. இதில், 320 கோவில்கள் ஆண்டிற்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்டவை; 34,062 கோவில்களின் ஆண்டு வருமானம், 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவே உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு ஏராளமான நிலங்கள், மனைகள், கட்டடங்கள் உள்ளன. அவற்றின் மூலம், ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வேண்டும். ஆனால், 60 கோடி ரூபாய் மட்டுமே கிடைப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள கோவில்களை பாதுகாக்கும் அமைப்பாக, ஆலய வழிபடுவோர் சங்கம் விளங்குகிறது. இதன் சார்பில், கோவில்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள, 60 பிரதான கோவில்களை தேர்வு செய்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு, பெரும்பாலான கோவில்களில் இருந்து முறையான பதில் தரப்படவில்லை.
கோவில் சொத்துக்கள், அவற்றின் வருமானம், ஆக்கிரமிப்புகள் குறித்த கேள்விகளுக்கு, அறநிலையத்துறை அனுப்பிய பதில்கள்:
*கோவில் ஊழியர்களின் நேரத்தை வீணாக்கும் செயல் என, ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவில்; மருதமலை, முருகன் கோவில்; மதுரை, மதன கோபால சுவாமி கோவில் ஆகியவை பதில் அளித்துள்ளன.
*காஞ்சிபுரம், வழக்கறுத்தீஸ்வரர் கோவில் சார்பில், இந்த விவரங்களை விளம்பர பலகையில் எழுதி வைத்துள்ளோம் என, பதில் அளிக்கப்பட்டுள்ளது.
*கரூர், தான்தோன்றிமலை கோவில் சார்பில், ஒரு பக்கத்திற்கு தட்டச்சு கூலி, 10 ரூபாய், தேடுதல் செலவு, ஆட்டோ செலவு தனி; எனவே, நேரில் வந்து பெற்றுக் கொள்ளவும் என, பதில் கூறப்பட்டுள்ளது.
*திருத்தணி, முருகன் கோவில் சார்பில், தணிக்கை அறிக்கையை ஏன் கேட்கிறீர்கள் என, எதிர்கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
*கும்பகோணம், நாகேஸ்வரன் கோவில் சார்பில், கேள்வி ஆங்கிலத்தில் உள்ளதால் புரியவில்லை என்ற பதில், 30 நாட்கள் கழித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
*சேலம், இணை கமிஷனர் அலுவலகம் சார்பில், மனுதாரர் கருவூலத்தில் பணம் கட்டி ரசீது அனுப்பினால், பதிலளிக்கப்படும் என, பதில் கூறப்பட்டுள்ளது.
*கும்பகோணம், கும்பேஸ்வரர் கோவில் சார்பில், கமிஷனரிடம் ஒப்புதல் கடிதம் பெற்றால் பதில் அளிக்கப்படும் என, பதில் கூறப்பட்டு உள்ளது.
*திருச்சி, நெல்லை இணை கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட, 30 மனுக்களுக்கு எந்த பதிலும் அனுப்பவில்லை.
*அறநிலையத்துறை சார்பில் அனுப்பியுள்ள பதில்களை பார்க்கும் போது, கோவில்களில் நடக்கும் முறைகேடுகளை மூடி மறைக்கும் செயல் இது என, ஆலய வழிபடுவோர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.