பதிவு செய்த நாள்
06
ஜூன்
2016
12:06
காரைக்கால்: திருநள்ளாரில் உள்ள நளம் குளத்தில், பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக, பழைய நீரை வெளியேற்றிவிட்டு, புதிய நீரை நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரைக்கால், திருநள்ளாரில் உள்ள, தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. திருநள்ளாருக்கு வருகின்ற பக்தர்கள், சனீஸ்வர பகவானை தரிசனம் செய்வதற்கு முன், நளம் குளத்தில் குளிப்பது முக்கிய சடங்காக பின்பற்றப்படுகிறது. குளித்த பின், அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று தேங்காய் உடைத்து வழிபடுகின்றனர். பிறகே, திருநள்ளாரு கோவிலுக்கு செல்வது வழக்கம்.
தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீராடும் நளம் குளத்தை சுத்தமாக பராமரிக்கும் பணியை, கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. நளன் குளத்தில் உள்ள பழைய நீரை, பிரமாண்டமான மோட்டார்கள் மூலமாக வெளியேற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. பழைய நீர் வெளியேற்றப்பட்ட பின், புதிய நீர் நிரப்பப்படும்.