பதிவு செய்த நாள்
09
ஜூன்
2016
11:06
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜூன் 11 முதல் 20ம் தேதி வரை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இந்நாட்களில் சாயரட்சை பூஜைக்கு பின், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி, சுவாமி சன்னதி நுாறு கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளுவர். பின், திருவாசகம் ஓதப்பட்டு, நாதஸ்வர கலைஞர்கள் 9 வகையான ராகத்தில் இசைத்தவுடன் தீபாராதனை நடக்கும். முப்பழ அபிஷேகம் ஆனி பவுர்ணமியன்று ஜூன் 20ல் உச்சிக்கால வேளையில் மூலஸ்தான சொக்கநாத பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் அபிஷேகம் நடக்கிறது. பின்னர், சித்திரை வீதிகளில் வெள்ளி குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடக்கும்.
ஆனி உத்திரம்: ஆனி உத்திரமான ஜூலை 9 இரவு முதல் மறுநாள் அதிகாலை வரை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் பாலாபிஷேகம், இரவு பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் மாசி வீதி புறப்பாடு நடக்கும். அம்மன், சுவாமி 6 கால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர், சிவகாமி அம்மனுக்கு நுாறு கால் மண்டபத்தில் ஆனி உத்திர திருமஞ்சனம் நடக்கும். காலபூஜை முடிந்ததும் காலை 7:00 மணிக்கு மேல் அம்மன், சுவாமி மாசிவீதிகளில் உலா வருவர்.அபிஷேக, திரவிய பொருட்களை ஜூலை 9 முதல் கோயிலில் வழங்கலாம், என, இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.