பதிவு செய்த நாள்
09
ஜூன்
2016
11:06
கோவை: கோவை ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கோவை ராஜவீதியில், ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், மகா கும்பாபிஷேகம், தேவல மகரிஷி பிரதிஷ்டை மற்றும் பெரிய அம்மன் பண்டிகை உற்சவம், கடந்த, 5ல் கங்கணம் கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள், ேஹாமங்கள் நடந்து வருகின்றன. நேற்று காலை, அம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும், மாலை பெரிய அம்மன் பண்டிகையும் நடந்தது. நேற்று அதிகாலை, வேதிகார்ச்சனை, ேஹாமம், தீபாராதனை, ஐந்தாம் கால யாக பூஜைகளை தொடர்ந்து, கலசங்கள் கோவிலை சுற்றிலும் வலம் எடுத்து செல்லப்பட்டன. சிவாச்சார்யார்கள் வேதங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், அம்மனுக்கு காலை, 9 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது.
பெரிய அம்மன் பண்டிகை: கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததை தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு, கொடி அழைத்து வருதலுடன், பெரிய அம்மன் பண்டிகை துவங்கியது. மாலை விழா கொடியேற்றப்பட்டது. இரவு, ராஜா அண்ணாமலை ரோடு, தேவாங்க நெசவாளர் காலனியிலுள்ள, சித்தி விநாயகர் கோவில் மைதானத்தில், ஆவாரம் செடிக்கு, காப்பு கட்டப்பட்டது. இன்று, காலை, 7:00 மணிக்கு, பண்டார தட்டம் கொண்டு வருதலும், காலை, 9:00 மற்றும் மாலை, 5:30 மணிக்கு, லட்சார்ச்சனையும், மாலை, 6:30 மணிக்கு, பட்டிமன்றம் நிகழ்ச்சியும் நடக்கிறது.