பதிவு செய்த நாள்
09
ஜூன்
2016
12:06
சேலம்: கோட்டை கோவிலில், உள்பிரகாரத்தை புனரமைப்பது தொடர்பாக, அதிகாரிகள், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்களிடம், டவுன் இன்ஸ்பெக்டர் பேச்சு நடத்தினார். சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணி, 2 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. முதல்கட்டமாக, வெளி பிரகாரத்தை அதிகாரிகள் இடித்தனர். பின், உள் பிரகாரத்தை இடிக்க முயன்றபோது, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், புனரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. கோட்டை மாரியம்மன் அறக்கட்டளை நிறுவனர் ரஜினி செந்தில், உள்பிரகாரத்தை இடிக்கக்கூடாது என, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், உள் பிரகாரத்தை புனரமைக்க, 94.5 லட்சம் ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது. அதையடுத்து, கோவில் செயல் அலுவலர் உமாதேவி தலைமையிலான அதிகாரிகள் குழு, உள் பிரகாரத்தை இடிப்பது தொடர்பாக, நேற்று ஆய்வு நடத்தியது. இதனால், உள் பிரகாரத்தை இடிக்கக்கூடாது என, வழக்கு தொடர்ந்த அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அவர்களை அழைத்து, டவுன் இன்ஸ்பெக்டர் குமரேசன், பேச்சு நடத்தினார். அப்போது, ஆடிப்பண்டிகைக்கு, 40 நாட்கள் தான் உள்ளன. பண்டிகை முடிந்த பின், கோவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளலாம். மீறினால், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என, அவர்கள் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, அவர்கள் சென்றனர். செயல் அலுவலர் உமாதேவி கூறுகையில், பக்தர்கள் நலன்கருதி, உள் பிரகாரம் இடிக்கப்பட உள்ளது. அதற்கான பணி, விரைவில் துவங்கும், என்றார்.