மார்த்தாண்டம் : மலையாள மக்களின் வசந்த கால விழாவான திருஓணம் இன்று(9ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கேரள மக்கள் ஆண்டு தோறும் திருஓணத்தை விமர்சையாக கொண்டாடுகின்றனர். மலையாள ஆண்டு சிங்கம் மாதம் அதாவது ஆவணி மாதம் பிறந்தால் திருஓணத்தை கொண்டாட மக்கள் ஆயத்தமவார்கள். அத்தம் பத்துனு பொன் ஓணம் கொண்டாடப்படுகிறது. அத்தம் நட்சத்திரம் அன்று முதல் ஓணத்தை கொண்டாடுவார்கள். பின் பத்து நாட்கள் ஓணம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. திருஓணத்தை முன்னிட்டு கேரளாவில் வள்ளப்போட்டி, அத்தப்பூ போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடந்தது. மார்த்தாண்டம், குழித்துறை, நட்டாலம் பகுதி பள்ளி கல்லூரிகளில் தொடர்ந்து அத்தப்பூ போட்டிகள் நடந்தது. இதை போல் கிராம பகுதியில் குழந்தைகளை குதூகலப்படுத்த மரங்களில் ஊஞ்சல் கட்டப்பட்டது. பள்ளிகளில் மாணவ, மாணவியரின் திறமையை வெளிக்கொண்டு வரும் விதத்தில் அத்தப்பூ போட்டி நடந்தது.
விழாக்கோலம் : திருவனந்தபுரத்தில் இருந்து களியக்காவிளை வரை எங்கு பார்த்தாலும் விழா கோலம் பூண்டுள்ளது. பல வண்ணத்தில் அத்தப்பூ கோலம் போட்டுள்ளனர். வண்ண விளக்குகள் ஜோலிக்கிறது. இதனால் பாலராமபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து மார்த்தாண்டம் வந்து சேர சுமார் இரண்டு மணி நேரம் ஆவதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார். காய்கறி விலை உயர்வு கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் குவிந்துள்ளனர். இதை போல் கேரள மக்களும் காய்கறிகள் வாங்க மார்த்தாண்டம் மார்க்கெட் வந்துள்னர். காய்கறிகள் வாகனங்களில் கேரளா கொண்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் பழங்கள் மற்றும் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மொத்த விலைக்கு நூறு ஏத்தன் பழம் 700 முதல் 900 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதை போல் நூறு செந்துழுவன் பழம் 600 முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இருப்பினும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு கடுமையான டிமெண்ட் உள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார். கோயில்களில் சிறப்பு பூஜை திருஓணத்தை முன்னிட்டு குழித்துறை மகாதேவர் கோயில், வெட்டுவெந்நி கண்டன் சாஸ்தா கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இன்று பெண்கள் நேரியல் ஆடை அணிந்தும், மற்றவர்கள் புத்தாடை உடுத்தும் கோயில் செல்வர். பின் உறவினர்களுடன் வீட்டில் அறுசுவை உணவுகள் சமைப்பர். இதை போல் முக்கிய ஜங்ஷன்களில் இளைஞர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. திருஓணத்தை முன்னிட்டு குமரி மாவட்ட எல்லையோர பகுதி களைகட்டியுள்ளது.