அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோயில் தெப்பம் கழிவு நீர் குளமாக மாறி சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட நுாற்றாண்டு புகழ் வாய்ந்த மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. கோயில் அருகில் ‘சூரிய புஷ்கரணி’ என அழைக்கப்படும் தெப்பகுளம் உள்ளது. இங்கு குளித்தால் தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்பது ஐதீகம். தெப்பத்தை முறையான பராமரிப்பு செய்யாமல் விட்டதால், தெப்பத்திற்கு மழை நீர் வரும் கால்வாய்கள் அடைபட்டு போயின. அவற்றில் முட்புதர்களும், ஆக்கிரமிப்புகளும் உள்ளது. மழை நீர் தெப்பத்திற்குள் வர முடியவில்லை. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு கழிவு நீர் தெப்பத்தில் சேர்கிறது. அப் பகுதி ஓட்டல் கழிவுகள், குப்பை இங்கு தான் கொட்டப்படுகின்றன. இரவு நேரங்களில் ‘குடிமகன்கள்’ தெப்ப படிகளில் அமர்ந்து குடித்து விட்டு பாட்டில்களை வீசுகின்றனர். பிளாஸ்டிக் கழிவு மற்றும் கழிவு நீரால் ஏற்படும் துர்நாற்றத்தை தாங்க முடியவில்லை. தெப்பத்தை துார்வாரி மழை நீர் வரும் கால்வாய்களை சீராக்க இந்து அறநிலைய துறையினர் அக்கறை காட்டவில்லை. அரசு மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து நுாற்றாண்டு புகழ்வாய்ந்த இந்த தெப்பத்தை துார் வாரி மழை நீர் மட்டும் வரும் வகையில் வழி காண வேண்டும்.