பதிவு செய்த நாள்
11
ஜூன்
2016
01:06
நியூயார்க்: அமெரிக்கா, நியூயார்க் மெட்ரோபாலிடன் அருங்காட்சியகத்தில், கோவர்த்தனகிரியை ஏந்திய கிருஷ்ணர் ஓவியம் வைக்கப்பட உள்ளது.உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றான இதில் இம்மாதம் 14ம் தேதி முதல் செப்டம்பர் 12ம் தேதி வரை நடைபெற உள்ள தெய்வீக இன்பம் என்ற தலைப்பிலான கண்காட்சியில், பல்வேறு இந்து கடவுளர்களின் ஓவியங்கள் இடம் பெறுகின்றன.
16ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அரசர்களின் அரசவையை அலங்கரித்த 100க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெறும். கண்களையும் ஆத்மாவையும் மகிழச் செய்யும் இந்த ஓவியங்களில் காணப்படும் காட்சிகள். பார்ப்பவர் மனதை மயக்கி புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். ராமரின் காலில் குத்திய முள்ளை நீக்குதல், கிருஷ்ணரும் கோபியர்களும் மழைக்கு ஒதுங்கி நிற்றல், சிவனும் பார்வதியும் தாயம் விளையாடுதல், கிருஷ்ணர் கோவர்த்தன கிரியைத் தூக்கிப் பிடித்தல், ராமரின் திருமணத்திற்கு தசரதன் செல்லல், ராட்சத ஒற்றர்களை ராமர் மன்னித்தல், கடவுளர்களால் வழிபடப்படும் தேவி பத்ரகாளி, பரத்வாஜ் குடிலில் ராமர், சீதா, லட்சுமணன், கிருஷ்ணரைக் கெஞ்சும் கோபியர், சிவனுடன் தேவி பைரவி, தசரதனின் மரணம், யமுனை நதியை கோபியர் கடக்க துர்வாச முனிவர் உதவுதல், கிருஷ்ணரும் ராதையும் போன்ற பல ஓவியங்கள் இதில் இடம் பெற உள்ளன. காகிதத்தில் வரையப்பட்ட இந்த வண்ண ஓவியங்களில் தங்கம் மற்றும் வெள்ளி வேலைப்பாடுகளும் உள்ளன. இங்கு வைக்கப்பட உள்ள பல ஓவியங்கள் இதுவரை எந்த கண்காட்சியிலும் இடம் பெறாதவை.