பதிவு செய்த நாள்
17
ஜூன்
2016
11:06
திருப்போரூர்: திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடத்தின் திருப்பணிகள் பல ஆண்டுகளாக முடிவடையாமல் உள்ளதால், கும்பாபிஷேக பணிகளும் நடைபெறாமல் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டில், நான்கு ஆண்டுகளுக்கு முன், சிதம்பர சுவாமிகள் மடத்தின் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இன்னும் முடியாமல் உள்ளன. சிதம்பரசுவாமிகளின் சன்னிதி, தியான மண்டபம், அன்னதானக் கூடம் ஆகியவற்றின் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இது, இப்பகுதி வாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. வெளியூர்களில் இருந்து, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு வருவோர், சிதம்பர சுவாமிகளின் மடம், எங்கு இருக்கிறது என தெரியாத நிலையில் தவிக்கின்றனர். எனவே, மடத்தின் திருப்பணிகளை விரைவில் முடித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் கோவிலை நிறுவிய சிதம்பர சுவாமிகள், 460 ஆண்டுகளுக்கு முன், மதுரையில் பிறந்தவர். பேரூர் சாந்தலிங்க சுவாமிகளை குருவாக ஏற்றுக் கொண்ட குமாரதேவரின் சீடர் இவர். சாந்தலிங்க சுவாமிகள் எழுதிய வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத உந்தியார், கொலை மறுத்தல் மற்றும் சீர்காழி கண்ணுடைய வள்ளல் எழுதிய, ஒழிவில் ஒடுக்கம் ஆகிய ஐந்து நுால்களுக்கு உரை எழுதியவர். கண்ணுவார்பேட்டையில் மடம் நிறுவி பசிப்பிணி, நோய்ப்பிணி நீங்கிய சிதம்பர சுவாமிகள், வைகாசி விசாகம் நாளில், மாலைப்பொழுதில், திருப்போரூர் கோவிலின் கருவறையில் மறைந்தார். அதுமுதல் இது வரை, 375 மகா குரு பூஜைகள் நடந்தேறியுள்ளது. இவர், திருப்போரூர் சன்னிதி முறை, குமார தேவர், குமார தேவர் நெஞ்சு விடு துாது, மீனாட்சி கலிவெண்பா, பஞ்ச அதிகார விளக்கம், வேதகிரீஸ்வரர் பதிகம் போன்ற நுால்களை எழுதியுள்ளார்.
சிதம்பர சுவாமிகளின் அருமை, சிலருக்கு தெரியவில்லை. அவரின் மடத்திற்கு, விரைவில் திருப்பணிகள் முடித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். கார்த்திக், திருப்போரூர்
இப்படி ஒரு மடம், கண்ணகப்பட்டில் இருக்கிறது என்பதே, வெளியூர் வாசிகளுக்கு தெரியாது. ஏனென்றால், மடத்தைப் பற்றிய விளம்பரம், திருப்போரூரில், கோவில் அருகில் எங்கும் இல்லை. முத்து, திருப்போரூர்
திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவிலுக்கு சென்றிருந்தேன், அங்கே கேள்விப்பட்டு தான், சிதம்பர சுவாமிகளின் மடத்திற்கு வந்தேன். இங்கு வந்து பார்த்தால், பராமரிப்பு இல்லாமல், திருப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதைப் பார்த்தால், வேதனையாக உள்ளது. முருகன், சென்னை