பதிவு செய்த நாள்
20
ஜூன்
2016
10:06
மேட்டூர்:மேட்டூர் அணை நீர்ப்பரப்பு பகுதியில், முழுமையாக தெரியும் நந்தி சிலைக்கு, பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 42.46 அடியாக சரிந்ததால், பண்ணவாடி நீர்ப்பரப்பு பகுதியிலுள்ள, ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை முழுமையாக, நீருக்கு வெளியே தெரிகிறது. நந்தி சிலை முழுமையாக நீருக்கு வெளியே தெரிவது மட்டுமின்றி, சுற்றியுள்ள அணை நீர்ப்பரப்பு பகுதி வறட்சியால் பாளம், பாளமாக வெடித்துள்ளது, விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அணையில் நீர்வரத்து அதிகரிக்க கோரி, கரையோர மக்கள், மீனவர்கள், விவசாயிகள், ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை முன், அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
இதற்கிடையில், தமிழக எல்லையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில், நேற்று முன்தினம் இரவு பருவ மழை தீவிரம் அடைந்ததால், நேற்று காலை, காவிரியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேட்டூர் அணை பண்ணவாடி துறையில் இருந்து, மறுகரையிலுள்ள நாகமறைக்கு மக்கள், பரிசல் மூலம் காவிரியாற்றை கடந்து செல்வர். நேற்று, காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், பயணிகளின் பரிசல்கள் தாமதமாக இயக்கப்பட்டன. கூடுதல் நீர்வரத்தால் நேற்று முன்தினம், 124 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று வினாடிக்கு, 392 கனஅடியாக அதிகரித்தது.