பதிவு செய்த நாள்
21
ஜூன்
2016
11:06
கோவை: இறைவன் அருள் இருந்தால், பூமியில் எந்த காரியம் செய்யவும் வயது வரம்பு கிடையாது,’’ என, திருச்சி கல்யாணராமன் பேசினார். கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் நடக்கும், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில், ஞானசம்பந்தர் குறித்து நேற்று அவர் பேசியதாவது: ஞானசம்பந்தர் முருகப்பெருமானின் அவதாரம் என்று ஒரு கருத்து உள்ளது. சீர்காழியில் பிறந்தவர். பார்வதி தேவியிடம் ஞானப்பால் குடித்து, மூன்று வயதிலேயே தேவாரம் பாடியவர். இறைவன் அருள் இருந்தால், பூமியில் எந்த காரியம் செய்யவும் வயது, வரம்பு கிடையாது. மதுரை செல்வதற்கு முன், திருநாவுக்கரசர், நவகிரகங்களின் நிலை சரியில்லை என்று சொன்னபோது, சிவனை வணங்குபவர்களுக்கு, நவகிரகம் ஒன்றும் செய்யாது என ஞானசம்பந்தர், தேவாரம் பாடியவர். திருநாவுக்கரசர் சொன்னது போல், பயணத்தில் இடையூறு வந்தது. சிவனின் அருளால், அந்த தடை நீங்கியது. ஞானசம்பந்தர், வேதாரண்யம் சென்ற போது, திருநாவுக்கரசர் இவரின் பல்லக்கை சுமந்தார். இது தெரியாமல், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இந்த ஊருக்கு வந்திருக்கிறாமே என கேட்டார். நான் பல்லக்கை சுமந்து வருகிறேன் என திருநாவுக்கரசர் பதிலளித்தார். நீங்கள் பல்லக்கை சுமக்கலாமா என கேட்டார். நான் வயிற்றுவழி போக, சைவ மதத்தில் சேர்ந்தேன். நீங்களோ பார்வதிதேவியிடம் ஞானப்பால் குடித்து சைவம் வளர்ப்பவர் என்றார். இறைவனைவிட தொண்டர்கள் தான் உயர்ந்தவர் என்ற தத்துவத்தை வெளிக்காட்டவே, திருநாவுக்கரசர், ஞானசம்பந்தரின் பல்லக்கை சுமந்தார். இறைவனுக்கும், அடியார்களுக்கும் தொண்டு செய்தால், நன்மையுடன் கூடிய வாழ்க்கையை நாம் அனுபவிப்போம். இவ்வாறு, திருச்சி கல்யாணராமன் பேசினார்.