பதிவு செய்த நாள்
24
ஜூன்
2016
12:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சந்தவெளியம்மன் கோவிலில் உத்தரவு இன்றி, அபிஷேக கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாகவும், கோவிலில் கட்டண விவர அறிவிப்பு பலகையும் வைக்கப்பட வில்லை என, பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். பெரிய காஞ்சிபுரம் வெள்ளக்குளம் பகுதியில் அமைந்துள்ள சந்தவெளி அம்மன் கோவில், அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அம்மனுக்கு அபிஷேக கட்டணமாக, கடந்த ஆண்டு, 900 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதன் பின், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கும்பாபிேஷகம் முடிந்த பின், 1,500 ரூபாய் கட்டணம் வசூலித்தனர். கடந்த இரண்டு மாதங்களாக, 1,800 ரூபாய் கட்டணம் வசூல் செய்கின்றனர். ஆனால், கோவில் கணக்கில் வெறும், 50 ரூபாய் மட்டும் காட்டப்படுகிறது. முறையாக கட்டணம் வசூல் செய்தால் கோவிலுக்கு வருமானம் கிடைக்கும் என, பக்தர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமை அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டும். மற்ற நாட்களிலும் அபிஷேகம் நடைபெறுகிறது.அதற்கான ரூபாய் யாருக்கு செல்கிறது. கட்டணத்தை நிர்ணயித்தது யார்? எந்த உத்தரவும் இல்லாமல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கோவிலில் இதற்கான அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்பட வில்லை.