பதிவு செய்த நாள்
24
ஜூன்
2016
12:06
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆடி கிருத்திகைக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக, 12 ஏக்கர் நிலத்தை, கோவில் நிர்வாகம் சீரமைத்து வருகிறது.
திருத்தணி முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா அடுத்த மாதம், 28ம் தேதி துவங்குகிறது. இந்த விழாவில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசிப்பர். பெரும்பாலான பக்தர்கள் வாகனங்களில் வருவதால், மலைக்கோவில் மற்றும் மலையடிவாரத்தில் போதிய இடவசதி இல்லாததால் வாகனங்களை, 3 கி.மீ., துாரத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தி விடுகின்றனர்.
இதனால், மலைக்கோவிலுக்கும் திருத்தணி நகருக்குள் வருவதற்கும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இதையடுத்து, கோவில் நிர்வாகம், பக்தர்களின் வசதிக்காக, ஆடி கிருத்திகை விழாவிற்கு வருகை தரும் வாகனங்கள், மலையடிவாரத்தில் நிறுத்துவதற்கு வசதியாக, கோவில் இடத்தில், 12 ஏக்கர் நிலத்தை சுத்தம் செய்யும் பணி துவங்கியது. ஜே.சி.பி., இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்களுடன் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றி, நிலத்தை சமன் செய்து வருகின்றனர். இதுகுறித்து, கோவில் அலுவலர் ஒருவர் கூறியதாவது:
அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆடி கிருத்திகைக்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக, முட்செடிகள் வளர்ந்துள்ள கோவில் இடத்தை, திருக்கோவில் நிதியில் இருந்து, 4.30 லட்சம் ரூபாயில் செலவில் சீரமைத்து வருகிறோம். இப்பணிகள் ஓரிரு நாட்களில் முடிந்து விடும். பின், கோவிலுக்கு வரும் வாகனங்கள் மட்டும் இங்கே அனுமதிக்கப்படும். பிற வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் எளிதாக மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை வழிபடலாம். இவ்வாறு அவர் கூறினார்.