பதிவு செய்த நாள்
13
செப்
2011
10:09
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்காடி வீதியில், சுற்றுலா பயணிகளை கவர, ரூ.1.68 கோடியில் ஒலி, ஒளிக்காட்சி அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.20 லட்சம் செலவில் ஆடியோ வசதி செய்யப்படுகிறது. மதுரைக்கு சுற்றுலா வருபவர்களுக்கு மீனாட்சி கோயில், திருமலை நாயக்கர் மகால், காந்தி மியூசியம் தவிர வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. மகாலில் பயணிகளை கவர, தினமும் மாலையில் ஒலி,ஒளிக்காட்சி நடத்தப்படுகிறது. அதேசமயம் மீனாட்சி அம்மன் கோயிலில், ஆயிரங்கால் மண்டபம் தவிர, பயணிகளை கவரும் வகையில் வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. இதனால் இங்கும் ஒலி, ஒளிக்காட்சி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.இதற்காக புதுமண்டபம் ஆய்வு செய்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக கோயில் வடக்காடி வீதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. டில்லி "இன்டிகிரேட் டிஜிட்டல் சொல்யூசன் என்ற நிறுவனத்திற்கு ஒரு கோடியே 68 லட்சத்து 53 ஆயிரத்து 860 ரூபாயில் ஒலி, ஒளிக்காட்சி அமைத்துதர இந்து சமயஅறநிலையத்துறை கடந்த ஜன.,25ல் அனுமதி வழங்கியது. சட்டசபை தேர்தல் காரணமாக, கிடப்பில் போடப்பட்ட இத்திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதில், கோயிலில் காத்திருக்கும் பக்தர்களுக்கு வசதியாக "டிவிக்கள் மூலம் கோயில் திருவிழாக்கள், உற்சவ உலா குறித்த காட்சிகள் ஒளிபரப்பப்படவுள்ளன. இதற்காக ரூ.20 லட்சம் செலவில் ஆடியோ வசதி செய்யப்படுகிறது. ஒளிபரப்பு இல்லாத சமயங்களில், ஓதுவார்களின் பாடல்கள் ஒலிபரப்பப்படவுள்ளது.