ரமணரை தரிசிக்க பக்தர் ஒருவர், தாம்பாளம் ஒன்றில் அல்வா வைத்து வணங்கினார். நெய்யும், முந்திரியுமாக வாசனை மூக்கை துளைத்தது. அல்வாவையும், பக்தரையும் மாறி மாறி பார்த்தார் ரமணர். பக்தரும் அல்வாவை ரமணர் சாப்பிடும் வரை காத்திருந்தார். அப்போது அங்கு நாய் ஒன்று ஓடி வந்தது. அல்வாவைக் கண்டதும் வாலை ஆட்டியபடி மகிழ்ச்சியுடன் முகர்ந்து பார்த்தது. பக்தர் நாயை விரட்ட முயன்றார். ஆனால், ரமணரோ ‘பாவம். அதை விரட்ட வேண்டாம். அதுவும் கடவுளால் படைக்கப்பட்ட உயிர் தானே!” என்றார். இதையே தனக்கு கிடைத்த உபதேசமாக கருதிய பக்தர் விலகி நின்றார். நாயும் அல்வாவை சிறிதளவு கவ்விக் கொண்டு ஓடியது. மீதி அல்வாவை ‘பைரவர் பிரசாதம்’ என்று சொல்லிய ரமணர் அனைவருக்கும் கொடுத்தார். தானும் ஒரு வாய் சாப்பிட்டு மகிழ்ந்தார்.