*இளைஞனே! தன்னம்பிக்கை ஒன்றே உன் பரம்பரைச் சொத்து என்பதை மறவாதே. உன்னை சுமக்கும் பூமி கூட உன் காலடியில் தான் இருக்கிறது. தன்னம்பிக்கையோடு கடவுள் நம்பிக்கையும் இணைந்து விட்டால் உன் வாழ்வு ஒளி மிகுந்ததாகி விடும் *விதியை நிர்ணயிக்கும் சக்தியும், அதற்கு தேவையான ஆற்றலும், உறுதியும் உன்னிடம் நிறைந்திருக்கிறது. *நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறி விடுவாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாக ஆகி விடுவாய். *உலகம் மிகப் பெரிய பயிற்சிக்கூடம். இங்கு நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவே மண்ணில் பிறவியெடுத்து வந்திருக்கிறோம். *துருப்பிடித்து தேய்வதை விட உழைத்து தேய்வது மேலானது. நல்ல வழியில் பணம் சம்பாதிப்பதும் அதை சமுதாயத்திற்கு பயனுள்ள விதத்தில் செலவழிப்பதுமே சிறந்த வழிபாடு. *பிறருடைய பாராட்டு, பழிச்சொல் பற்றி நீ யோசிக்க ஆரம்பித்தால் உன்னால் மகத்தான செயல் எதையும் சாதிக்க முடியாது. *இரக்கமுள்ள இதயம், சிந்தனை மிக்க மூளை, உழைக்க துடிக்கும் கைகள் இவை மூன்று மட்டுமே இன்று நாம் முன்னேறுவதற்கு அவசியமானவை. *இயற்கையை வெல்லவே நீ இந்த உலகில் பிறந்திருக்கிறாய். அதற்குப் பணிந்து போவதற்கு அல்ல. *உடல், மனம் இரண்டையும் பலவீனப்படுத்தும் எதையும் கனவிலும் நெருங்காதே. சோம்பேறித்தனத்தை எப்பாடுபட்டாவது துரத்திவிடு. சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்றே பொருள். *எண்ணம், செயல் இரண்டிலும் குறுக்கிடும் தீமைகளுடன் ஓயாமல் போரிட்டுக் கொண்டேயிரு. இதில் வெற்றி பெற்று விட்டால் அமைதி உன்னைத் தேடி வரும். *அனைவரும் கடவுளின் அன்பு குழந்தைகள். எதையும் சாதிக்கக் கூடிய வலிமையும், மன உறுதியும் நம் மனதிற்குள் குடிகொண்டிருக்கிறது. *ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் உயர்ந்த லட்சியம் இருக்க வேண்டும். அதை அடைவதற்கு முடிந்த வரை சிறப்பான வகையில் முயற்சிக்க வேண்டும். *மற்றவர்கள் ஏளனம் செய்வதை சிறிதும் பொருட்படுத்தாதே. கடமைகளைச் செய்வதில் கண்ணாக இரு. சுய கட்டுப்பாடு ஒன்றே லட்சியத்தை அடைய உனக்குப் பேருதவியாக இருக்கும். *மனிதனை உருவாக்குவதில் இன்பமும், துன்பமும் சரி சமமான இடம் வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே சிறந்த ஆசிரியராக மனிதனுக்கு வழி காட்டுகிறது. *‘என்னால் எல்லாம் முடியும்’ என்று முழுமையாக ஒருவன் நம்பினால், அனைத்தையும் சாதித்துக்காட்டும் வல்லமையை அவன் பெறுவது திண்ணம். *மனதை ஒருமுகப்படுத்தக் கற்றுக் கொள். தன்னை மறந்து மன ஒருமைப்பாட்டுடன் பணி செய்யும் போது மனிதன் அழியாப்புகழை அடைகிறான். மகான் விவேகானந்தர்