பதிவு செய்த நாள்
06
ஜூலை
2016
10:07
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில், வரும், 10ம் தேதி பாலாலயம் நடைபெற உள்ளது.திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி சுவாமி கோவில், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று. புராதன மிக்க இக்கோவிலில், ஸ்ரீயோகநரசிம்மர், வரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர், ஆகிய சன்னிதிகள் உள்ளன. இந்த சன்னிதிகளுக்கும், அதன் விமானங்களுக்கும், பின் கோபுர வாசல் விமானம், பாண்டி கோபுரம், நரசிம்மர் திருமண மண்டபம், நரசிம்மர் மண்டபத்தின் மேல்தளம், கீழ்தளம், குளக்கரை ஆஞ்சநேயர் விமானம், அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, 2005ல், மஹா சம்ப்ரோட்சணம் நடந்தது. தற்போது, முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக வரும், 10ம் தேதி பாலாலயம் நடைபெற உள்ளது. மேலும், 55 லட்சம் ரூபாய் மதிப்பில், சுவாமிக்கு தங்க கிரீடம், கர்ண பத்திரம், சடகோபன் மற்றும் கவசங்கள் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. திருப்பணி ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், துறை கமிஷனர் வீரசண்முகமணி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.