பதிவு செய்த நாள்
06
ஜூலை
2016
02:07
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில் 139 வது வருடாந்திர ரத யாத்திரை கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஒடிசா மாநிலம் புரியில் வரும் 15ஆம் தேதி வரை இந்த திருவிழா நடைபெறுகிறது. முதல் நாளான இன்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். ஜெகந்நாதர், அவரது சகோதரர் பாலபத்ர நாதர், சுபத்ரா தேவி என 3 தேர்களையும் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். ரத யாத்திரையையொட்டி புரி நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மற்ற ஊர் தேர்கள் போல் அல்லாது, புரியில் ஆண்டுதோறும் புதிதாக தேர்கள் செய்யப்பட்டு ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இதற்காக ஒடிசா மாநில வனத்துறையினர் மரங்களை வழங்கி வருகின்றனர். மொத்தம் 15 கி.மீ., தூரம் நடக்கும் இந்த ரத யாத்திரையில் 3 தேர்களுடன் 18 அலங்கரிக்கப்பட்ட யானைகள், 101 வாகனங்கள், 20 பஜனை குழுக்களும் உடன் செல்கின்றன.
இதேபோல் குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலில் வருடாந்திர ரத யாத்திரை கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஜெகநாதர் ரத யாத்திரையும், ரம்ஜான் பண்டிகையும், இன்று ஒரே நாளில் வருவதால், ஆமதாபாத் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் ஆனந்திபென் படேல் தலைமையிலான குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரின் முக்கிய விழாக்களில் ஒன்றான, ஜெகநாதர் ரத யாத்திரை, அந்நகரில் விமரிசையாகக் கொண்டாடப்படும்.ஆமதாபாத் ஜெகநாதர் கோவிலில் இருந்து புறப்படும் ரதங்கள், நகரில், 14 கி.மீ., சுற்றி வரும். சுமார் 11 மணிநேரம் இந்த ரத யாத்திரை நடைபெறும். ரத யாத்திரையை முன்னிட்டு
அதிகாலை 4.30 மணிக்கு பா.ஜ., தலைவர் அமித்ஷா, குஜராத் முதல்வர் ஆனந்திபென்
பட்டேல் உள்ளிட்ட விஐபி.,க்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்கனவே, மக்கள் நெருக்கம் மிகுந்த அந்த பகுதியில், ரத யாத்திரையை காண, லட்சக்கணக்கான மக்கள் திரளுவர்.இதில், இந்த நாளில், முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜானும் வருவதால், ஆமதாபாத் மாநகர போலீசார் மற்றும் நிர்வாகத்தினர், பலத்த பாதுகாப்பு மற்றும் அமைதி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.