பதிவு செய்த நாள்
07
ஜூலை
2016
11:07
செஞ்சி: இஞ்சிமேடு பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்திற்கு, வரும் 11ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சிமேட்டில் அமைந்துள்ள, 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த, பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் பெருமாளை, சூரிய வம்சத்து மன்னர்கள் ஆராதித்து வந்ததாக வரலாறு கூறுகிறது. இடைவிடாது யாகங்கள் நடந்து வந்ததால், யக்ஞமேடு என அழைக்கப்பட்டது. பின்னாளில் இஞ்சிமேடு என, பெயர் மருவி அழைக்கப்படுகிறது.
அகோபில மடத்தின் 34வது பட்டம் ஸ்ரீசடகோப ராமானுஜ யதீந்தர மகாதேசிகன் மற்றும் 42வது பட்டம் ஸ்ரீரங்க சடகோப யதீந்தர மகா தேசிகன் ஆகிய இரு மகான்கள், இங்கு அவதரித்துள்ளனர். இக்கோவிலில் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், கல்யாண லட்சுமி நரசிம்மர், ஸ்ரீராமர், சக்கரத்தாழ்வார் மற்றும் ஆண்டாள் சன்னதிகள் தனித்தனியாக உள்ளன. சீதா, லட்சுமணர் சமேதராக கட்சி தரும் ராமபிரானை, பரத்வாஜ முனிவர் பி ரதிஷ்டை செய்தது தனி சிறப்பாகும். இங்கு நடந்து வரும் யாகங்கள், பூஜையினால், இத்திருத்தலம் தனி சிறப்பு பெற்று, பக்தர்களின் பிரார்த்தனைகள் விரைவில் கைகூடி வருவதாகவும், திருமண தடை நீங்குவதுடன், தம்பதிக்கு இடையே ஒற்றுமை, குழந்தைப்பேறு போன்ற வேண்டுதல்கள் நிறைவேறு வதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். ராஜகோபுரத்தின் மகா கும்பாபிஷேகம், வரும் 11ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, இன்று 7ம் தேதி, யாகசாலை பூஜைகளுடன் விழா துவங்குகிறது. இன்று மாலை 6 மணிக்கு, பகவத் அனுக்ஞை, யஜமான சங்கல்பம், ஆசார்ய வர்ணம், புண்யாஹ வாசனம், யாகசாலை பிரவேசம், வேத திவ்யபிரபந்தம் நடக்கிறது.
நாளை (8ம் தேதி) காலை 7 மணிக்கு, ரக்ஷாபந்தனம், வாஸ்து ஹோமம், விசேஷ ஹோமம் மற்றும் ஆண்டாள் ராஜகோபுர கலச ஸ்தாபனம் செய்ய ப்பட உள்ளது. மாலை 6 மணிக்கு, ஜலதி வாசம், சதுஸ்த்தான அர்ச்சனம், ஹோமம் செய்ய உள்ளனர். தொடர்ந்து 9ம் தேதி காலை 8 மணிக்கு, வி÷ சஷ ஹோமம், 3 மணிக்கு, ராஜகோபுரம், சக்கரத் தாழ்வார், ஆண்டாள், பரிவார மூர்த்திகளுக்கு 17 கலசங்கள் ஸ்தாபனம் செய்கின்றனர். தொடர்ந்து, திருமஞ்சனமும், தெய்வங்களுக்கு கண் திறப்பும் நடக்க உள்ளது. இதையடுத்து, 10ம் தேதி, தெய்வங்களுக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. 11ம் தேதி காலை, விஸ்வரூப தரிசனம், 7 மணிக்கு,சதுர்த்தான அர்ச்சனம், ஹோமம், காலை 9 மணி முதல் 10 மணிக்குள் மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கும்ப புறப்பாடும், மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. இந்நிகழ்ச்சிகளுக்கு, அஹோ பில மடம் ஆஸ்தான வித்வான் குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ.எம். ராஜகோபாலன் முன்னிலை வகிக்கிறார். விழா ஏற்பாடுகள், இஞ்சிமேடு ஸ்ரீஸ்ரீரங்க சடகோப கைங்கர்ய சபா நிர்வாகி பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் செய்யப்பட்டு வருகிறது.