பதிவு செய்த நாள்
07
ஜூலை
2016
11:07
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நடைபெற உள்ள ஆடிக்கிருத்திகை விழாவிற்கு வரும், வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக, 8.50 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடந்து வரும் ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்ப திருவிழாவிற்கு தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசிப்பர். வெளியூர்களில் இருந்து, வரும் பக்தர்களின் வாகனங்கள், கோவில் அருகில் நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லாததால், 5 கிலோ மீட்டர் துாரத்தில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து நடந்து வருவர். இதையடுத்து, கோவில் நிர்வாகம், பக்தர்கள் வசதிக்காக, இம்மாதம், 26ம் தேதி முதல், 30ம் தேதி வரை நடைபெற உள்ள ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்ப உற்சவ திருவிழாவிற்கு, வாகனங்களில் வரும் பக்தர்கள், மலையடிவாரம் மற்றும் மலைக்கோவிலில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கோவில் பொதுநிதியில் இருந்து, 8.50 லட்சம் செலவில் மேற்கண்ட இடங்களில் உள்ள கோவில் நிலத்தை சீரமைத்து, தார்ச்சாலை மற்றும் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
ஆலோசனை: இதனால், 2,500 வாகனங்களுக்கு மேல், மேற்கண்ட இடங்களில் நிறுத்தலாம். இப்பணிகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) தனபாலன் ஆகியோர் நேரில் சென்று இடத்தை பார்வையிட்டு அடிப்படை வசதிகள் செய்வது குறித்தும் கோவில் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.