பதிவு செய்த நாள்
11
ஜூலை
2016
11:07
கொளத்துார்: திருமண தடை, கிரக தோஷங்கள் நீங்க, அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.சேலம் மாவட்டம், பாலவாடியை சேர்ந்தவர் காமராஜ். ஊர் மந்திரி கவுண்டரான இவரது நிலத்தில் அருகருகே அரச மரமும், வேப்ப மரமும் வளர்ந்திருந்தன. அரச மரம் சிவனாகவும் (ஆண்), வேப்ப மரம் சக்தியாகவும் (பெண்) கருதப்படுகிறது. நன்கு வளர்ந்த இரு மரங்களுக்கும் திருமணம் செய்ய, ஊர் பிரமுகர்கள் முடிவு செய்தனர். இதன்படி, முகூர்த்த நாளான நேற்று அதிகாலை, பிரம்மமுகூர்த்தத்தில் மங்கள வாத்தியம் முழங்க, மந்திரம் ஓதி, அரசுவுக்கும், வேம்புவுக்கும் முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில், பாலவாடி, காவேரிபுரம், கருங்கல்லுாரை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். காவேரிபுரத்தை சேர்ந்த குப்புசாமி கூறுகையில், பருவம் எய்திய அரசுவுக்கும், வேம்புவுக்கும் திருமணம் செய்தால், சம்பந்தப்பட்ட பகுதியில் கிரக தோஷங்கள், பல்வேறு தடைகளால் திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். மழை பொழிந்து கிராமத்திலும் சுபிட்சம் ஏற்படும் என்பது ஐதீகம், என்றார்.