பதிவு செய்த நாள்
13
ஜூலை
2016
12:07
திருவாலங்காடு: பத்ரகாளியம்மன் கோவிலில், நேற்று நடந்த பாலாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருத்தணி முருகன் கோவிலின் துணைகோவிலான பத்ரகாளியம்மன் கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. பத்ரகாளியம்மன் சும்பன், நிசும்பன் ஆகியோரை சம்ஹாரம் செய்ததை ஒட்டி, இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதத்தில் ஒன்பது நாள் உற்சவம் நடைபெறுகிறது. நிறைவு நாளன்று, படுகளம் நிகழ்ச்சி நடக்கிறது. அந்த வகையில், நேற்று பத்ரகாளியம்மன் கோவிலில், நேற்று முதல் நாள் நிகழ்ச்சியில், 108 பால்குட ஊர்வலம் நடந்தது. காலை 10:00 மணிக்கு, பால்குடம் ஊர்வலமாக சென்று மூலவர், பத்ரகாளியம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில் காளியம்மனுக்கு காப்புக் கட்டும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது. இரவு 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன், சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும், 20ம் தேதி வரை உற்சவம் நடைபெறும்.