கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் சுந்தரர்–பரவைநாச்சியார் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் சுந்தரர் சாமிகள் இறைவனடி சேர்ந்த ஆடிமாத நாளையொட்டி சுந்தரர்–பரவைநாச்சியாருக்கு நேற்று திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. செம்பொற்சோதிநாதர் கோவிலில் நேற்று காலை 5:00 மணிக்கு கோ பூஜை, 5:30 மணிக்கு செம்பொற்சோதிநாதருக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடத்தி பன்னிரு திருமுறை விண்ணப்பம் செய்தனர். காலை 8:30 மணிக்கு திருவிளக்கு, புனித நீர், ஆணைந்து வழிபாடுகள் நடத்தி, கலசங்களில் சுவாமியை எழுந்தருள செய்து வேள்வி நிறையவி சேர்ப்பித்தனர். அதனைத் தொடர்ந்து சுந்தரர்–பரவைநாச்சியாருக்கு திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது. வைபவத்தினை திருநாவுக்கரசர் திருமடம் நாச்சியப்பன் செய்து வைத்தார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.