பதிவு செய்த நாள்
16
செப்
2011
11:09
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலுக்கு, புதிதாக உருவாக்கப்பட்ட மரத்தேர் வெள்ளோட்டம், நேற்று, கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், மரத்தேர் இல்லாததால், பிரம்மோற்சவம் தேரோட்ட நிகழ்ச்சி அன்று, தூக்கு தேரில் சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்து வந்தது. கடந்த வருடம், கோவிலுக்கு புதிதாக மரத்தேர் உருவாக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உதவியுடன், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், 27 அடி உயரம், 13 அடி அகலம் கொண்ட, புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டது.இத்தேர் வெள்ளோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, பக்தர்கள் கரகோஷத்திற்கிடையே, கோவிலிலிருந்து புறப்பட்ட தேர், திருக்கச்சி நம்பி தெரு, செட்டித் தெரு வழியாக, வரதராஜப் பெருமாள் கோவிலை சென்றடைந்தது. பின், அதே வழியில் கோவிலுக்கு திரும்பியது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தனர்.