பதிவு செய்த நாள்
23
ஜூலை
2016
01:07
பெங்களூரு : பெங்களூரு டி.சி.எம்., ராயன் ரோடு வேல்முருகபுரம் பாலசுப்ரமணிய சுவாமி சன்னிதியில் வரும், 27ம் தேதி பரணி பூஜையும், 28ம் தேதி ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. கடந்த, 78 ஆண்டுகளுக்கு முன், மைசூரு அரசிடமிருந்து பெங்களூரு நகரில் டாக்டர் டி.சி.எம்., ராயன் ரோடு அருகிலுள்ள காலி இடத்தில், 56 வீட்டு மனைகளை, அப்போதைய எம்.எல்.சி.,க்கள் சிலர் வாங்கினர். அப்போது முருகன் கோவிலுக்கென்று, சிறு இடமும் ஒதுக்கப்பட்டது. இப்பகுதி மக்களிடம் நன்கொடை வசூலித்து, 1938ம் ஆண்டு ஏப்ரல், 2ல் கோவிலுக்கான திருப்பணி துவங்கியது. நிச்சலபிரகாஷ் சுவாமிகள், கும்பாபிஷேகம் நடத்தினார். பின், ஒவ்வொரு வீட்டிலும் பணம் வசூலித்து, சன்னிதியின் முன்புறம் கோபுரம் கட்டப்பட்டது. நுாதன அபிவிருத்தி சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, கட்டடம் கட்டி, இரவு பாடசாலை நடத்தினர். 1979ல் சன்னிதியின் பின்புற இடத்தில் மூலவரை வலம் வருவதற்கு பிரகாரம் அமைக்கப்பட்டது.
கடந்த, 1986 ஜனவரியில் விநாயகர், கருமாரி அம்மன், சத்ய நாராயணர், நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி, கார்த்திகை, மார்கழி, கும்பாபிஷேகம் நடந்த ஏப்ரல், 22 ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். இந்த ஆண்டு, ஆடி கிருத்திகையை முன்னிட்டு, வரும், 27ம் தேதி காலை பரணி பூஜை, விநாயகர் துதி, அபிஷேகம் ஆராதனை நடக்கிறது. 28ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை, மங்களார்த்தி நடைபெறும். மாலை, 6:00 மணிக்கு ஓம்சக்தி வேல் சபாவில் ராஜாஜி நகர் புஷ்பதேவராஜ் மற்றும் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. கடந்த, 29ம் தேதி பகல், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. காவடி செலுத்துவதற்கும், சிகை நீக்குவதற்கும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை ஆலய தலைவர் கிருஷ்ணன், உதவி தலைவர் வேலு, பொது செயலர் ரவிசங்கர், செயலர்கள் தாஸ், சசிதரன், பொருளாளர் ஜோதி பிரகாஷ், உதவி செயலர்கள், மகளிர் குழுவினர் செய்துள்ளனர்.