பதிவு செய்த நாள்
23
ஜூலை
2016
01:07
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்றார் அய்யன் வள்ளுவர். அந்த ஆதி பகவனுக்கு, ஒரு கோவில் இருக்கும் விஷயம் எத்தனை பேருக்குத் தெரியுமென்று தெரியவில்லை. ஆதம்பாக்கம், கேசரி நகரில் ஆதிபகவன் கோவில் உள்ளது. இந்த கோவிலை இங்கு உருவாக்கி, ஆண்டு முழுவதும் அமைதியான செய்து வருவது, தமிழ்ஜெயின்நயினார் சமூகத்தார். இந்த கோவில் உருவான பின்னணி, மிகவும் சுவாரஸ்யமானது. சுமார், 700 ஆண்டுக்குமுன், வடிவமைக்கப்பட்ட இந்த ஆதிபகவன் சிலை, கோவிலம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்கிறார், கோவில் நிர்வாகியான ஜெயின் சாஸ்திரி. அவரே தொடர்கிறார்... எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஹேமலதா என்ற பெண், நங்கநல்லுாரில் வசித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒரு கட்டட ஒப்பந்ததாரர் வீட்டில் ஆதி பகவன் சிலை இருப்பதைப் பார்த்துள்ளார். அதில், ஜென சிந்தாமணி துர்வேதிமங்களம்” என்ற வாசகம் உள்ளது. அது, ஜைன வேதத்தில் உள்ள வார்த்தை என்பதால், அது ஆதி பகவன் சிலை என்பது உறுதி செய்துள்ளார்.
அவரிடம்,“இது எங்கள் சமூகம் வணங்கும் கடவுள், எப்படி உங்களுக்கு கிடைத்தது?” என்று கேட்டுள்ளனர். கோவிலம்பாக்கம் குளத்தில் என் தந்தை எடுத்து வந்தது. இது தெய்வச்சிலை என்று அப்போது எங்களுக்கு தெரியாது என, ஒப்பந்ததாரர் கூறியுள்ளார்.அவரின் அனுமதியோடு, சிலையை எடுத்து வந்து, 1996ம் ஆண்டு, ஆதம்பாக்கத்தில், ஆதிபகவன் திகம்பர ஜைன கோவில் கட்டினோம். தண்ணீர், பால், சந்தனம், பச்சரிசி, தேங்காய், பழங்கள், நெய் தீபம், ஊதுபத்தி போன்ற பொருட்கள் வைத்து வழிபாடு நடத்தப்படும். வழிபாட்டுக்கு என்று தனி பூசாரி கிடையாது. வழி பட வருபவர்கள் தான் பூஜை செய்வர். அவர்களை, “ஸ்திராவகர்” என்று அழைப்போம். வணங்கும்போது, “புண்யாக வாசனை” என்ற வார்த்தையை உபயோகித்து, தண்ணீர் தெளித்து வழிபடுகிறோம். அர்ச்சனை முடிந்தபின், பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்குவதில்லை. கோவிலில் பணி புரிபவர்கள் எடுத்து செல்வர். தெய்வத்திடம் எதையும் வேண்டுவதில்லை. ஆதி பகவன் புகழைப்படித்து, வழிபட்டாலே பலன் கிட்டும். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான், கும்பாபிஷேகம் நடத்தப்படும். கடைசியாக, 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
நங்கநல்லுார், வேளச்சேரி, கோவிலம்பாக்கம், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம் பகுதியில் இருந்து, எங்கள் சமூகத்தை சேர்ந்த பக்தர்கள் இங்கு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். பூசாரி இல்லாமல், வேண்டுதல் இல்லாமலே, பக்தர்கள் மனமறிந்து, வேண்டியதை அள்ளித்தரும் ஆதி பகவன், நிச்சயம் வித்தியாசமான சுவாமி தான்.
தீப ஆராதனை: தினமும், காலை 8:30 முதல் 9:30 மணி வரை விசேஷ நாட்கள்: தீபாவளி, மகாவீர் ஜெயந்தி, பரிபூஷனம், ஆவணி அவிட்டம்.