பதிவு செய்த நாள்
23
ஜூலை
2016
01:07
மைசூரு: மைசூரு சாமுண்டீஸ்வரி தேவி கோவிலில், பக்தர்களுடன் பக்தராக வரிசையில் நின்று முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி, அம்மனை தரிசனம் செய்தார். முதல்வர் சித்தராமையாவுக்கு திருமணமாகி, 38 ஆண்டுகளாகிறது. இவர் மனைவி பார்வதி இதுவரை எந்த பொது நிகழ்ச்சியிலும், விழாக்களிலும் மக்கள் பார்க்கும் வகையில் கலந்து கொண்டதில்லை. கோவிலுக்கு வந்தாலும், யார் கண்ணிலும் படாமல் சுவாமி கும்பிட்டு விட்டு சென்று விடுவார். தன் மீது கேமரா படுவதையோ, மற்றவர்கள் வி.ஐ.பி., போன்று நடத்துவதையோ விரும்பாதவர். கொஞ்சம் கூச்ச சுபாவம் நிறைந்தவர். முதல்வர் சித்தராமையா அரசியலுக்கு வந்து, 36 ஆண்டாகிறது. இதுவரை, எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதல்வர் பொறுப்பு வகித்தவர். மூன்று ஆண்டாக முதல்வர் பதவி வகித்து வருகிறார். இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் மனைவியுடன் சேர்ந்து சென்றதில்லை. சமீபத்தில் நடந்த மைசூரு யதுவீர் திருமணத்துக்கும் தனியாகவே சென்றார். இந்நிலையில் நேற்று, கன்னட ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி, முதல்வரின் மனைவி பார்வதி, மைசூரு சாமுண்டீஸ்வரி தேவியை தரிசித்தார். அங்கிருந்த அர்ச்சகர்களும், போலீசாரும் சிறப்பு வரிசையில் அழைத்தும் ஏற்றுக்கொள்ளாமல், மற்ற பக்தர்களுடன் வரிசையில் நின்று தரிசனம் செய்தார். மீடியாவினர் புகைப்படம் எடுத்தபோது, கையால் தன் முகத்தை மறைத்து கொண்டார். முதல்வரின் மகன் ராகேஷ் குறித்து விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சியினர், இதுவரை பார்வதி பற்றி விமர்சனம் செய்ததில்லை.