குருவித்துறை: குருவித்துறை குருபகவான் கோயிலில் ஆனிமாத உற்சவம் நடந்தது. குருபெயர்ச்சியை முன்னிட்டு நாராயணன் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியருடன் சித்திர ரதத்தில் எழுந்தருளி, பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்ற குருபகவானுக்கு வரம் தரும் நிகழ்ச்சியாக ஆனிமாத உற்சவம் நடந்தது. பட்டர்கள் ஸ்ரீதர், ரங்கநாதர், பாலாஜி சடகோபன் ஆகியோர் அபிஷேக தீபாராதனைகள் செய்தனர். குருபகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு ஆக.,2 காலை 9.27 மணிக்கு பெயர்ச்சியாகிறார். முன்னதாக அனைத்து ராசிக்காரர்களுக்கும் இக்கோயிலில் பரிகாரபூஜையாக ஜூலை 31 காலை 10.45 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கி, ஆக.,2 வரை மூன்று நாட்கள் நடக்கிறது. அதற்கான பரிகார விசேஷ பூஜைகள் நேற்று துவங்கின. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி விஸ்வநாத், தலைமை கணக்கர் வெங்கடேசன் செய்துள்ளனர்.