பதிவு செய்த நாள்
25
ஜூலை
2016
11:07
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழாவில், நேற்று கொடியேற்றம் நடந்தது. மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா கடந்த, 19ல் பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று காலை கொடியேற்றம் விழா நடந்தது. முன்னதாக யாகசாலை அமைத்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் சுப்ரமணியசாமி கோவில் அர்ச்சகர்கள் கலச பூஜை, கணபதி ஹோமம் செய்தனர். சிங்க உருவம் போட்ட இரண்டு கொடிகளை, தேக்கம்பட்டி ஊர் மக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பவானி ஆற்று கரையோரம் முத்தமிழ் விநாயகர் கோவிலில், கொடிகளுக்கு பூஜை செய்து, கோவிலுக்கு எடுத்து வந்தனர். திரளான பக்தர்கள் உடன் வந்தனர். யாகசாலையில் கொடிகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். கோவில் முன்புள்ள கொடிமரத்தில் ஒரு கொடியையும், மற்றொரு கொடியை பச்சை மூங்கிலில் கட்டி, பந்தல் முன்பும் நிறுத்தினர்.
உதவி ஆணையர் ராமு, பரம்பரை அறங்காவலர் வசந்தா, பூசாரிகள் பரமேஸ்வரன், ஆனந்தன், கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர். இன்று இரவு பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், நாளை காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடக்க உள்ளது. உதவி ஆணையர் ராமு கூறுகையில், “குண்டத்தை முன்னிட்டு, அரை கி.மீ., முன்னதாகவே வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். நவீன மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. எல்.சி.டி., டிவிக்கள் பல இடங்களில் அமைக்கப்படுகின்றன. கூடுதல் ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆற்று படித்துறையில், தீயணைப்பு வீரர்கள், பரிசல் இயக்குவோர் தயார்நிலையில் இருப்பர். மொபைல் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது,” என்றார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.