பதிவு செய்த நாள்
25
ஜூலை
2016
11:07
சென்னை: இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக, மயிலாப்பூரில் விவேகானந்தர் ரத பூஜையுடன், 25 ரதங்களுக்கு சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல், சுற்றுச்சூழலை பராமரித்தல், பெற்றோர் - ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்மை யைப் போற்றுதல் மற்றும் நாட்டுப்பற்றை உணர்த்துதல் போன்ற கருத்துகளை முன்னிலைப்படுத்தி, 8வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி, மீனம்பாக்கம், ஏ.எம்.ஜெயின் கல்லுாரி வளாகத்தில், ஆக., 2 முதல், 8 வரை நடக்கிறது. அக்கண்காட்சியின் முன்னோட்டமாக நேற்று, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகில், விவேகானந்தரின் சிலைகள் வைக்கப்பட்ட, 25 ரதங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ராமகிருஷ்ணா மடங்களின் மேலாளர் சுவாமி விமூர்த்தனந்தா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், ஆடிட்டர் குருமூர்த்தி, இந்து ஆன்மிக கண்காட்சியின் துணைத் தலைவர் ராஜலட்சுமி மற்றும் ஏராளமான பக்தர்களும் பங்கேற்றனர். சென்னையில் இருந்து, நேற்று இரவு, 9:00 மணிக்கு புறப்பட்ட, 25 ரதங்களும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு, விவேகானந்தரின் போதனைகளை விளக்குவதோடு கலை, கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்த ரத யாத்திரை, 10 நாட்கள் தொடரும். இவை, ஆக., 4ல், சென்னை, மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லுாரி வளாகத்தில் நடக்கும், இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி திடலை வந்தடையும் என, அமைப்பினர் தெரிவித்தனர்.